``துப்புரவுப் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு!” - குமுறும் தொழிலாளர்கள்! | Scam in Deposit fund, Cleaning staffs shocked

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:20 (06/03/2019)

``துப்புரவுப் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு!” - குமுறும் தொழிலாளர்கள்!

 

 போராட்ட நோட்டீஸ்

கரூர் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாமல் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 துப்புரவு பணியாளர்கள்

கரூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரமாக 200 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்கள் 400 -க்கும் மேற்பட்டவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெய்லான் என்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு தூய்மைப் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. அவ்வாறு ஒப்பந்தம் விடப்பட்டதில், 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பளத்திலிருந்து மாதாமாதம் தொழிலாளர் வைப்பு நிதிக்கான பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், அந்த நிறுவனம் சம அளவு செலுத்த வேண்டிய மற்றொரு பங்குத் தொகையும் செலுத்தப்படவில்லை.

மேலும், கரூர் நகராட்சி நிர்வாகத்தில் ரெய்லான் நிறுவன ஒப்பந்தப் பணிக் காலத்தில் தூய்மை சார் பணியாளர்களுக்குப் பிடித்தம் செய்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை, ஒப்பந்தம் முடிந்த பின்பும் செலுத்தாமல் இருக்கும் தொகை மட்டும் தொழிலாளி ஒருவருக்கு ஒரு லட்சம் தொகை அளவில் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிவர் அம்பேத்கர் தூய்மை தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுபற்றி, நம்மிடம் பேசிய பாண்டியன், ``மொத்தமாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சேர வேண்டிய தொழிலாளர் வைப்பு நிதி தொகையானது மொத்தம் ஒரு கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. வைப்பு நிதியைச் செலுத்தலன்னா, தூய்மைப் பணியாளர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் பாண்டியன்ஒன்றை நடத்தவிருக்கிறோம். மேலும், இதுகுறித்து கரூர் நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ந.க.எண்:13920/2018 ஜெ 2 நாள்:16.05.2018 மற்றும் 18.05.2018 அரசாணை 62-ன் படி 11. 10.2017 முதல் அரசாணை 62 படியும் தூய்மைத் தொழிலாளர்களுக்குப் பிரதி மாதம் ஒன்றுக்கு 13,725/- ரூபாய் சம்பளத்தை உடனே வழங்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற நிறுவனமாகும். இந்நிறுவனம் திருச்சியில் மண்டல அலுவலகமும் கரூர் நகராட்சி அலுவலக வளாகத்துக்கு அருகே துணை மண்டல அலுவலகமும் இருப்பது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

இதுகுறித்து, கரூர் நகராட்சி அதிகாரிகளைத் தொடர்புக்கொண்டு கேட்டபோது, ``தொழிலாளர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை ஒப்பந்த நிறுவனம்தான் செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ எனத் தெரிவித்தனர்.

 `தொழிலாளர்களின் வைப்பு நிதி பணத்தில் முறைகேடு நடந்திருந்தால், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்கத்துறை அதிகாரிகளே’ என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நகரைச் சுத்தப்படுத்திய நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உழைத்து சேர்த்த பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.


[X] Close

[X] Close