`சாமி கும்பிட வந்திருக்கேன்; அரசியல் பேச மாட்டேன்!'- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் | Transport Minister Vijayabaskar darshan at Rameswaram temple

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (06/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (06/03/2019)

`சாமி கும்பிட வந்திருக்கேன்; அரசியல் பேச மாட்டேன்!'- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அமாவாசை தினத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாமி ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இந்தத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான இன்று மாசி அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். பின்னர் மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்திருந்தார். அருள்மிகு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதிகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் கோயிலுக்கு வந்துள்ளேன். எனவே அரசியல் தொடர்பாக பேச விரும்பவில்லை. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளுக்கு நீண்ட காலமாக இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். முன்னதாக திருக்கோயிலுக்கு வந்த அமைச்சரைத் திருக்கோயில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அண்ணாதுரை, கலைச்செல்வன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


[X] Close

[X] Close