நாமக்கல் தொகுதி யாருக்கு? பதறும் அ.தி.மு.க. - தி.மு.க.! | Who will get Namakkal? ADMK and DMK in tension

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (06/03/2019)

கடைசி தொடர்பு:16:38 (06/03/2019)

நாமக்கல் தொகுதி யாருக்கு? பதறும் அ.தி.மு.க. - தி.மு.க.!

நாமக்கல்லில் கூட்டணிக் கட்சி போட்டியிடுவதும், வேட்பாளராக யாரை நிறுத்துவதும் என்ற முடிவு அமைச்சர் தங்கமணி கையில் உள்ளது.

நாமக்கல் தொகுதி யாருக்கு? பதறும் அ.தி.மு.க. - தி.மு.க.!

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கட்சிகள் அனைத்தும் தேர்தல் கூட்டணிக்கான வேலையில் பணியாற்றிவரும் நிலையில், நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகள் சார்பில் கூட்டணி கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்படும் என்ற தகவல், இரு கட்சிகளின் முக்கியப் புள்ளிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. 

காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன தி.மு.க. கூட்டணியிலும். பி.ஜே.பி., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியிலும் அங்கம் வைத்துள்ளன. தே.மு.தி.க-வும், அ.தி.மு.க. கூட்டணியுடன் இணையலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-விலும் சரி, தி.மு.க-விலும் சரி.... அந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கே   ஒதுக்கப்படும் என்ற தகவல் அக்கட்சியினரிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது. 2004-ம் ஆண்டு இரண்டு நாடாளுமன்றத்  தொகுதிகளாக இருந்த நாமக்கல், 2009-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்படி, நாமக்கல் புதிய தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் என ஐந்து தொகுதிகளும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்ககிரி சட்டமன்றத் தொகுதியும் அடங்கும். 2009-ல் தி.மு.க-வின் சார்பில் காந்திச்செல்வன் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சரானார். 2014-ல், அ.தி.மு.க. பி.ஆர்.சுந்தரம் எம்பி-யாக வெற்றிபெற்றார்.

நாமக்கல்

நாமக்கல்லில் தி.மு.க-வின் சார்பாக மீண்டும் காந்திச்செல்வன் நிறுத்தப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதி தி.மு.க-வின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கடந்த இரண்டு நாள்களாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொ.ம.தே.க நிர்வாகிகள் சிலர், "நாங்கள் தி.மு.க-விடம் வைத்த கோரிக்கைகளில் முக்கியமானது நாமக்கல் அல்லது பொள்ளாச்சி தொகுதியைத் எங்களுக்கு தர வேண்டும் என்பதே. எங்கள் கட்சியின் நிர்வாகிகளைக் கலந்தாலோசிக்கும்போது தங்களுக்குச் சாதகமான தொகுதி எதுவென்று சர்வே எடுக்கும்போது அனைவரும் சொல்லியது நாமக்கல்லைத்தான். கடந்த மாதம் பிரமாண்ட மாநாட்டை வேறு  நடத்தி உள்ளோம். அதனால் தைரியமாக நாமக்கல்லைக் கேட்டுள்ளோம்" என்றார்கள் .

நாமக்கல்

அதேபோல் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பாதி இடங்களுக்கு மேல் கூட்டணிக் கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதால், எந்தெந்த தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் என்ற சந்தேகம் அ.தி.மு.க-வினரிடையே எழுந்துள்ளது. அநேகமாக தே.மு.தி.க-வுக்குத்தான் நாமக்கல் ஒதுக்கப்படும் என்ற தகவலே இன்றைய ஹாட் டாபிக். சிட்டிங் எம்.பி-யான சுந்தரம் மறுபடியும் சீட் வாங்குவதற்காகக் காய் நகர்த்திவருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், "நாமக்கல் தொகுதி கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படும் என்ற தகவல் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது. அதுவும் தே.மு.தி.க-வுக்கு ஒத்துக்கப்படலாம் என்றே கூறுகிறார்கள். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவிலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகியாகவும் இருக்கிறார். அவருக்கு மாவட்ட அளவில் யார் யார் என்னென்ன செய்துவருகிறார்கள் என்று தெரியும். பி.ஆர்.சுந்தரமும், தான் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இன்னும் பிற உயர்மட்ட நிர்வாகிகள் சிலரும் போட்டியிடுவதால் இத்தொகுதியை அநேகமாக கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-விற்கே ஒதுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாமக்கல்லில் கூட்டணிக் கட்சி போட்டியிடுவதும், வேட்பாளராக யாரை நிறுத்துவதும் என்ற முடிவு அமைச்சர் தங்கமணி கையிலே உள்ளது" என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close