`உன்னைக் கொல்ல டிபன்பாக்ஸில அம்மா விஷம் கலந்திருக்காங்க!"- தங்கையின் அலர்ட்டால் உயிர்தப்பிய அக்கா | parent tried to killed her daughter, sister saved

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (06/03/2019)

கடைசி தொடர்பு:22:58 (07/03/2019)

`உன்னைக் கொல்ல டிபன்பாக்ஸில அம்மா விஷம் கலந்திருக்காங்க!"- தங்கையின் அலர்ட்டால் உயிர்தப்பிய அக்கா

தங்களின் விருப்பப்படி திருமணம் செய்ய மறுத்த மகளை, தாய், தந்தையே விஷம் வைத்துக் கொல்ல முயன்ற சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், இவர் மினி வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்குத் தனலட்சுமி என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றம்), ஜக்கசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

காவல் நிலையம் மகேந்திர மங்கலம்

நான்கு பேரும் பெண் குழந்தைகள் என்பதால், மூத்த மகள் உஷாவுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் தந்தை குமார். ஆனால் உஷா தனக்குத் திருமணம் வேண்டாம், நான் தொடர்ந்து படிக்கவே விரும்புகிறேன் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உஷா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததை தவறாக எடுத்துக்கொண்ட தந்தை குமார். தங்களது மினி வேனை இயக்கி வரும் டிரைவரை, மகள் உஷா காதலிப்பதாக எண்ணிக்கொண்டு பிரச்னை செய்துள்ளார். ஆனால், மகள் உஷா நான் யாரையும் காதலிக்கவில்லை என்று எடுத்துக் கூறியும் குமார் நம்பவில்லை.

அவசர அவசரமாக உறவினர் ஒருவருக்குக் கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், உஷா பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது தவறு என்று எச்சரிக்கை செய்து, நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கவும், உஷாவுக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து, பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.

விஷம் குருணை மருந்து

இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி பள்ளிக்குச் செல்லுமாறு உஷாவிடம், தாய் தனலட்சுமி கூறி, மதிய உணவை டிபன் பாக்சில் வைத்துக் கொடுத்துள்ளார். உஷாவும் இதை நம்பி பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். அதே பள்ளியில் படிக்கும் அவரது தங்கை, அக்கா மதிய உணவை நீ சாப்பிட வேண்டாம், அம்மா உன்னைக் கொல்ல மதிய உணவில் நெல் வயலுக்குப் போடும் (குருணை மருந்து) விஷத்தை  கலந்து கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கவும், உடனே தாய் தனலட்சுமி கொடுத்த டிபன் பாக்சை திறந்து பார்த்தபோது, உணவில் விஷம் கலந்த மருந்து வாடை வரவும், அதிர்ச்சி அடைந்த உஷா ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மகேந்திர மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மகேந்திர மங்கலம் போலீஸார் உஷாவின் பெற்றோர் குமாரையும், தனலட்சுமியையும் கைது செய்து விசாரித்தபோது, திருமணத்துக்கு மறுத்ததால் உணவில் விஷம் கலந்து மகளைக் கொல்ல முயன்றதை இருவரும் ஒப்புக்கொண்டதும். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். 

தற்போது மாணவி உஷாவை சைல்டுலைன் மூலம் தர்மபுரி சிறுவர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close