செய்தியாளர்களுக்கு சூட்கேஸ்.. சர்ச்சையில் கோவை மாநகராட்சி! | Coimbatore corporation budget controversy

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/03/2019)

கடைசி தொடர்பு:15:00 (06/03/2019)

செய்தியாளர்களுக்கு சூட்கேஸ்.. சர்ச்சையில் கோவை மாநகராட்சி!

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான ஷ்ரவன் குமார் ஜடாவத் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஷ்ரவன் குமார், கோவை ஆணையாளராக பதவியேற்றப் பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுதான். சரியாக 9.45 மணியளவில் ஷ்ரவன் குமார் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

கோவை மாநகராட்சி பட்ஜெட்

பட்ஜெட் புத்தகத்தில், ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், உள்ளாட்சித் முறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் படமும் இடம்பெற்றிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், மக்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதோடு நிற்காமல், செய்தியாளர்களுக்கும் சிறப்பு கவனிப்பு செய்யப்பட்டது.

பொதுவாக, சூட்கேஸில் கொண்டு வந்து பட்ஜெட் தாக்கல் செய்வார்கள். ஆனால், கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு சூட்கேஸ் பரிசாக வழங்கப்பட்டது. பட்ஜெட் புத்தகம், அது தொடர்பான ஒரு சி.டி, பேனா அதில் இருந்தது. இதற்கு முன்பு, ஃபைலில் வைத்துத்தான் பட்ஜெட் புத்தகங்கள் வழங்கப்படும்.

இதுதவிர, ஆவின் மில்க் ஷேக், காபி, பிரபல ஹோட்டலின் ஸ்நாக்ஸ் பாக்ஸ் வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் சிலர் முகம் சுழித்ததற்கு, ``சார் விருப்பம் இருந்தால் சூட்கேஸ் எடுத்துட்டு போங்க. வேண்டாம்னா.. பட்ஜெட் புத்தகம் மட்டும் எடுத்துட்டு போங்க" என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறினார்கள்.

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் பணத்தையும், பரிசையும் வாரி வழங்கும் நிலையில், தற்போது அதிகாரிகளும் அதைப் பின்பற்றுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


[X] Close

[X] Close