முதுமலை புலிகள் காப்பகத்துக்கு விரைவில் மருத்துவர் நியமனம்! - புதிய இயக்குநர் தகவல் | New doctor will appointed in Mudumalai sanctuary, says official

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (06/03/2019)

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு விரைவில் மருத்துவர் நியமனம்! - புதிய இயக்குநர் தகவல்

'முதுமலை புலிகள் காப்பகத்திற்கு, வனக் கால்நடை மருத்துவர் விரைவில் நியமிக்கப்படுவார்' என புதிதாக முதுமலை புலிகள் காப்பகத்தின் புதிய கள இயக்குநராகப்  பொறுப்பேற்றுக்கொண்ட கிருஷ்ணகுமார் கவுசல் உறுதியளித்தார்.

கிருஷ்ணகுமார் கவுசல்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில்,  ஓர் ஆண்டுக்கும் மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், மீட்புப் பணிகளின்போதும் சிரமம் ஏற்படுகிறது. காப்பகத்தின் கள இயக்குநராக இருந்த உலகநாதன்,  பதவி உயர்வு பெற்று, கடந்த ஆண்டில் தருமபுரி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர், முதுமலைக்கு புதிதாகக் கள இயக்குநர் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோவை மண்டல வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா, கூடுதல் பொறுப்பில் கவனித்துவந்தார்.

முதுமலை புலிகள் காப்பக எல்லை, கடந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட நிலையில், கள இயக்குநரை நியமிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், வேலூரில் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றிவந்த கிருஷ்ணகுமார் கவுசல், முதுமலை புலிகள் காப்பகத்தின் புதிய கள இயக்குநராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.  இதன் பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முதுமலையில் வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். முதுமலையைப் பொறுத்தவரை வன கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. கூடலூர் மற்றும் ஊட்டியில் இருந்து கால்நடைத் துறை மருத்துவர்கள் வாரம் ஒருவர் என ஷிப்ட் முறையில் வந்துசெல்கின்றனர். நிரந்தரமாக வன கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும் என வனத் துறையிலிருந்து கால்நடைத் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வனக் கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவார்'' என்றார்.


[X] Close

[X] Close