`சகல வசதிகளுடன் ஏ.சி பேருந்து!’- வேலூர் டு சென்னைக்கு ரூ.160 மட்டுமே கட்டணம் | New ac bus service flagged off Vellore- Chennai route

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (06/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (06/03/2019)

`சகல வசதிகளுடன் ஏ.சி பேருந்து!’- வேலூர் டு சென்னைக்கு ரூ.160 மட்டுமே கட்டணம்

வேலூரிலிருந்து சென்னைக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பல வசதிகளுடன்கூடிய ஏ.சி பேருந்து இயக்கப்படுவதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பலவசதிகளுடன் கூடிய ஏ.சி பேருந்து

சென்னையிலிருந்து, பல்வேறு வழித்தடங்களுக்கு போக்குவரத்து வசதிக்காகப் புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இவற்றில், சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு, பல வசதிகளுடன்கூடிய ஏ.சி பேருந்துகளை முதல்வர் தொடங்கிவைத்திருக்கிறார். வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்த ஏ.சி பேருந்தை, பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் பேருந்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் ஏ.சி ப்ளோயர்கள் உள்ளன. இருக்கையின் பின்னால் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் பேருந்தின் மேற்புறத்தில் அவசர வழி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின்போதும், எந்த நிறுத்தம் என்பது குறித்த தகவலைப் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில், 6 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகும். பேருந்தில் குளிர்ந்த காற்று குறையாமல் இருக்க, மேற்கூரை மற்றும் பக்கவாட்டுகளில் பி.வி.சி பேனல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

பலவசதிகளுடன் கூடிய ஏ.சி பேருந்து

முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் உள்ள கதவுகள் ரிமோட்டினால் இயங்கும். ‘ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி’ போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. இத்தனை வசதிகள் நிறைந்த இந்த ஏ.சி பேருந்தில், வேலூரிலிருந்து சென்னை செல்ல கட்டணம் வெறும் ரூ.160 மட்டும்தான். இது, சாதாரண பேருந்துக் கட்டணத்தைவிட 30 ரூபாய்தான் அதிகம். அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணத்திலிருந்து 10 ரூபாய் மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். வேலூரிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணி மற்றும் பகல் 2 மணிக்கு இந்த ஏ.சி பேருந்து இயக்கப்படும். அதேபோல, சென்னையிலிருந்து காலை 10 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு வேலூருக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டெரிக்கும் வெயிலில், சுகமான பயணம் மேற்கொள்ளலாம். இதேபோன்று கூடுதலாக மேலும் சில பேருந்துகளை இயக்க வேண்டுமெனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 


[X] Close

[X] Close