`பூந்தமல்லி நகராட்சியில் குப்பை அள்ளுவதில் ஊழல்!' - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம் | Corruption in garbage cleaning at poonamallee

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (06/03/2019)

கடைசி தொடர்பு:09:16 (08/03/2019)

`பூந்தமல்லி நகராட்சியில் குப்பை அள்ளுவதில் ஊழல்!' - ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்

பூந்தமல்லி நகராட்சியில் குப்பை அள்ளுவதில் ஊழல் நடந்துள்ளாதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி

பூந்தமல்லி நகராட்சியில் குப்பை அள்ளுவதில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் நம்மிடம் ஆவணங்களை காட்டினார். அதில் கடந்த ஆண்டு பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரூ 23.90 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அதே போல டெங்கு காய்ச்சல் விழிப்புணர் பேனர் செலவு ரூ.2,97,000 செலவு செய்யப்பட்டதாகவும், அதேபோல் ஓம் சக்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு டிராக்டர்களுக்கு குப்பை எடுத்துச் செல்ல மாத வாடகை பெயரில் 5,000,00 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை அள்ளும் தொழிலாளர்கள்

மேலும், வாலாஜா பேட்டை அக்ரோ இஞ்சினீயரிங் சர்வீஸ் கூட்டுறவு லிமிடெட் நிறுவனம் பெயரில் வேலை செய்யாமலேயே பில் மட்டும் போட்டு ஊழல் செய்துள்ளதாக அன்பழகன் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது போல 30 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கமிஷனர் டிட்டோஇந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் டிட்டோ அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம்.
``அவர் பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு பத்திலிருந்து பதிநாலு டன் வரை குப்பை சேருகிறது. அதை அகற்ற 230 பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால், எங்களிடம் 43 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களை வைத்து அவ்வளவு குப்பையை அள்ள முடியாது. அதனால் குப்பை அள்ளுவதற்கு தனியார் ஆட்களை வைத்து வேலை செய்கிறோம்'' என்றார். அதில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்திருப்பது தொடர்பாக கேட்டதற்கு,  ``அது போல் எதுவும் நடக்கவில்லை. நான் பொறுப்பேற்றதிலிருந்து ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. வேலைகளும் சரியாக நடக்கிறது அதில் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை'' என்றார்.

அப்படியானால் ஏற்கெனவே இருந்த கமிஷனர்கள் காலத்தில் ஊழல் நடந்துள்ளதா என்று கேட்டதற்கு, ``அது பற்றி எனக்கு தெரியாது'' என்று முடித்துக்கொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி நகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்ததாரரும்,  அவர் லேண்ட் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநருமான சிவகுருவிடம் பேசினோம். ``ஊழல் நடந்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்கள் நிறுவனத்தின் சார்பில் 176 பேரை குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். எங்களுடைய வேலை பொது மக்களிடமிருந்து வீடுகளுக்குச் சென்று குப்பைகளை வாங்குவது மட்டும்தான். அதிகாரிகள் அதை எங்கு கொட்டச் சொல்கிறார்களோ அங்கே கொட்டுவோம் அவ்வளவுதான். வண்டி, டீசல், டிரைவர் அனைத்தும் நகராட்சி நிர்வாகம் சார்ந்தது. மேன்பவர் மட்டுமே எங்களுடையது'' என்று முடித்துக்கொண்டார்.
 

பூந்தமல்லி நகராட்சி பதிநாலாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் கந்தனிடம் கேட்டதற்கு,  ``உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் அதிகாரிகள் நம்மை கேட்பதற்கு ஆள் இல்லை என்ற அதிகார திமிரில் கொள்ளை அடிக்கிறார்கள். கேட்பதற்கு யாரும் இல்லை. நகராட்சியில் உள்ள அனைத்துப் பிரிவில் உள்ள அதிகாரிகள் அனைவரும் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று கொள்ளை அடிக்கிறார்கள். ஆர்.ஐ. சிவகுமார் வரி வசூல் செய்வதில் பல முறைகேடு செய்து வருகிறார். லஞ்சம் கொடுத்தால் வரியைக் குறைத்து வாங்குவார். இல்லை என்றால் வரியை அதிகமாகப் போடுவார். நகரமைப்பு அதிகாரி இன்ஜினீயர், ஓவர்சியர், சுகாதாரத்துறை அலுவலர் என எல்லோரும் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களை கேட்பதற்கு ஆள் இல்லை. நகராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருக்கிறது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம். பூந்தமல்லியில் உள்ள 9 வது வார்டு பள்ளத் தெருவில் ஒன்றரை வருடங்களாக குடி தண்ணீர் பிரச்னை இருக்கிறது. இதுவரை அதிகாரிகள் சரி செய்யவில்லை. மேலும் கடந்த 18 ம் தேதி எடப்பாடி பழனிசாமி பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தின் கட்டடத்தைத் திறந்து வைத்தார் . முதலில் அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் என்றார்கள். தற்போது கூடுதலாக ஒன்றரை கோடி செலவானது என்கிறார்கள். மொத்தம் நாலரை கோடி மதிப்பு இருக்கும் கட்டடமா பாருங்கள் இப்போதே கழிவறைகள் சரியில்லை லிப்ட்டு வேலை செய்யவில்லை. நகராட்சி கட்டடத்தின் மதிப்பு இரண்டு கோடியை விட குறைவாகத்தான் இருக்கும். என்கிறார். தற்போதைய கமிஷனர் டிட்டோவிற்கு முன்பு இருந்த கமிஷ்னர் சித்ரா பெருமளவில் ஊழல் செய்துள்ளார். அவர் காலத்தில் கட்டப்பட்டதுதான் நகராட்சிக் கட்டடம். அவர்  நகராட்சிகளின் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு நெருக்கமானவர். பூந்தமல்லி நகராட்சியில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என்கிறார் கந்தன். ஊழல் நடந்திருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அப்பட்டமாய்த் தெரிகிறது பூந்தமல்லி நகராட்சியில். 


 


[X] Close

[X] Close