`சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்!’ - புது கோரிக்கையுடன் மோடிக்கு நன்றி சொன்ன அழகிரி | Alagiri thanks Modi for renaming Chennai central railway station after MGR

வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (06/03/2019)

கடைசி தொடர்பு:22:05 (06/03/2019)

`சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்!’ - புது கோரிக்கையுடன் மோடிக்கு நன்றி சொன்ன அழகிரி

''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, 'முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்' என அறிவித்த மோடிக்கு நன்றி'' என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

அழகிரி

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில், அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதேபோல, அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மோடி

அப்போது கூட்டத்தில் பேசிய மோடி, `திரையுலகை மட்டுமல்ல, தமிழக மக்களின் மனதையும் ஆட்கொண்ட எம்.ஜி.ஆரின் பெயர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சூட்டப்படும். அதேபோல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய அறிவிப்புகளைத் தமிழில் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது’’ என்றார்.  இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

அழகிரி

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `மரியாதைக்கும் பெருமதிப்பிற்கும் உரிய பிரதமர் மோடி அவர்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு, மறைந்த தமிழக முதல்வர், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரைச்சூட்டி பெருமைப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போல் சென்னை எழும்பூர் ரயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டிட வேண்டுமென எனது அன்புக் கோரிக்கையைத் தங்களிடம் வேண்டுகோளாக வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 


 


[X] Close

[X] Close