சக மாணவன் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை! | Engineering student suicide in puthukottai

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (07/03/2019)

சக மாணவன் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை!

புதுக்கோட்டை அருகே சக மாணவர் கன்னத்தில் அறைந்ததால், மனமுடைந்து  தற்கொலைக்கு முயன்ற இன்ஜினீயரிங் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் மாலாஸ்ரீ (21). புதுக்கோட்டை தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். மண்டையூரில் உள்ள தனியார் மகளிர் விடுதி ஒன்றில் தங்கி, தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். அதே வகுப்பில் இம்ரான் (23) என்ற மாணவனும் சிவில் இன்ஜினீயரிங் இறுதியாண்டு பயின்று வருகிறார். இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24 -ம் தேதி கல்லூரி ஓய்வு நேரத்தின்போது வகுப்பறையில் இம்ரான் இருக்கையில் அமர்ந்து, அவரது பேக்கை தலைக்கு வைத்து மாலாஸ்ரீ ஒய்வு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் வந்த இம்ரான் இதுகுறித்து கேட்டு மாலாஸ்ரீயை திட்டியுள்ளார். பதிலுக்கு மாலாஸ்ரீயும் இம்ரானை திட்டவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த இம்ரான் மாலாஸ்ரீயின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வகுப்பறையில் சக மாணவன் தன்னை கன்னத்தில் அறைந்ததை நினைத்து சோகத்தில் இருந்துள்ளார். மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த மாலாஸ்ரீ கடந்த 3 -ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சக மாணவிகள் சிலர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாலாஸ்ரீ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக இம்ரான் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

இதுகுறித்து சக மாணவர்களிடம் பேசினோம், ``மாலாஸ்ரீ எல்லாரிடமும் ரொம்ப ஜாலியாக அன்பாகத்தான் பழுகும். இம்ரானும், மாலாஸ்ரீவும் நல்ல நண்பர்கள்தான். மொதல்ல விளையாடுறாங்கன்னு தான் நினைத்தோம். இவ்வளவு சீரியஸாகும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கலை. மாலாவை நீ அடித்தது தவறு என்று இம்ரானை சக மாணவர்கள் அனைவரும் சேர்ந்து திட்டினோம். இம்ரானும் தப்பை ஒப்புக்கொண்டார். ஆனாலும், மாலாஸ்ரீ அன்றைக்கே தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி செய்தாள். நாங்கள் அனைவரும் அறிவுரை கூறி ஹாஸ்டலுக்கு அனுப்பி வச்சோம். அடிக்கடி கோபம் வரும் ஆனா.. அத மறந்துட்டு பழையபடி வந்து பேசிடும். இப்படி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிற முடிவ மாலா எடுக்கும்ன்னு நாங்க நினைக்கலை" என்றனர்.


[X] Close

[X] Close