``மீண்டும் துறைமுகத் திட்டத்தை தொடங்க முயன்றால்...!" - `மீண்டெழும் குமரி இயக்கம்' எச்சரிக்கை | Kanniyakumari port issue press meet

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:10:00 (07/03/2019)

``மீண்டும் துறைமுகத் திட்டத்தை தொடங்க முயன்றால்...!" - `மீண்டெழும் குமரி இயக்கம்' எச்சரிக்கை

மக்களுக்கு விரோதமான துறைமுகத் திட்டத்தை மீண்டும் தொடங்க முயன்றால் மாவட்டம் முழுவதும் மீண்டும் போராட்டங்கள் தொடங்கும் என `மீண்டெழும் குமரி இயக்கம்' அறிவித்துள்ளனர்.

மீண்டெழும் குமரி

`மீண்டெழும் குமரி இயக்கம்' அமைப்பின் நிர்வாகிகள் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், தாமஸ் பிராங்கோ உள்ளிட்டோர் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பிரதமர் மோடி கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரி வந்து பல திட்டங்களை தொடங்கிவைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சென்றார். கன்னியாகுமரி சரக்குப் பெட்டக மாற்று முனையத்தைப்பற்றி குறிப்பிடவோ, பேசவோ இல்லை. பிரதமர் துறைமுகத் திட்டத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதற்கு சமமாக கருதப்பட்டது. துறைமுகத்துக்காக சுற்றுச்சூழல் ஆய்வு, சமூக தாக்க ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை.

 

பேட்டி

மத்திய அரசின் வரவு, செலவு திட்ட அறிக்கையில் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 5-ம் தேதி `கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் லிமிட்டெட்' என்ற பெயரில் துறைமுகத்தை தொடங்கிவைத்ததாக கூறி ஏமாற்று வித்தை காட்டுகிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். துறைமுக கம்பெனி தொடங்குவதாக விழா எடுத்து அதில் காணொலி காட்சி மூலம் டெல்லியிலிருந்து கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இணை அமைச்சர் மன்சுக் மண்டாரியா ஆகியோர் வாழ்த்தி பேசியதின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. மக்களுக்கு விரோதமான துறைமுகத் திட்டத்தை மீண்டும் தொடங்க முயன்றால் மாவட்டம் முழுவதும் மீண்டும் போராட்டங்கள் தொடங்கும்" என்றனர்.


[X] Close

[X] Close