வயநாடு ரிசார்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் - அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சூடு -ஒருவர் சுட்டுக்கொலை! | Kerala vayanad news

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:10:24 (07/03/2019)

வயநாடு ரிசார்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் - அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சூடு -ஒருவர் சுட்டுக்கொலை!

கேரள மாநிலம் வயநாட்டில் தனியார் ரிசார்ட்டில் புகுந்த மாவோயிஸ்ட்டுகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த நேரடி மோதலில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், இரண்டு காவலர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்ட்

File Photo

கேரள மாநிலம் வயநாடு வைத்திரி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு 8 மணியளவில் 5 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்துள்ளனர். கோழிக்கோடு - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த ரிசார்ட்டில் தங்கியிருந்தவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளனர். மேலும், ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் 10 பேருக்கு உணவும் கேட்டுள்ளனர். இதுகுறித்து ரிசார்ட் ஊழியர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விரைந்து அந்த ரிசார்ட்டுக்குச் சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள் காவல்துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த மோதல் நேற்று இரவு நீண்ட நேரம் நீடித்தது. இதையடுத்து, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மாவோயிஸ்ட்டுகள் புகுந்துள்ளனர். மோதலில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், அவரைக் குறித்த விவரங்கள் தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் சுட்டதில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட்டு - காவல்துறை மோதலைத் தொடர்ந்து கோழிக்கோடு - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.


[X] Close

[X] Close