`இந்த உப்புமாவை சாப்பிடுமா?'- உணவில் விஷம் கலந்து பேராசிரியை மனைவியைக் கொன்ற பேராசிரியர்! | Husband killed wife by adding poison in her food

வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (07/03/2019)

கடைசி தொடர்பு:23:02 (07/03/2019)

`இந்த உப்புமாவை சாப்பிடுமா?'- உணவில் விஷம் கலந்து பேராசிரியை மனைவியைக் கொன்ற பேராசிரியர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திவ்யா

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வெள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின். பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வியன்னூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சில்வெஸ்டர் என்பவரின் மகள் திவ்யாவுக்கும் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திவ்யாவும் பொறியியல் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் பெல்லார்மின் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதனால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்று விடும்படியும் திவ்யாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார்.

பெல்லார்மின் - திவ்யா

திவ்யா பிரிந்துசெல்ல மறுத்ததால் அவருக்கு பெல்லார்மின் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் பாதரசத்தை கொடுத்து, அதை குடிக்கும்படி திவ்யாவை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார் பெல்லார்மின். பாதரசத்தை திவ்யா தட்டிவிட்டதில் அவரது நகைகள்மீது பட்டு,  நாசமாகியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு திவ்யா தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பெற்றோர் சமரசம் செய்ததைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பெல்லார்மின் தன் மனைவிக்கு விஷம் கலந்த உப்புமா மற்றும் குளிர் பானத்தை சாப்பிடக் கொடுத்துள்ளார். கணவனின் பாசத்தால் நெகிழ்ந்துபோன திவ்யா அதை வாங்கி சாப்பிட்டுள்ளார். மீதமுள்ள உப்புமாவை தனது வீட்டு நாய்க்கும் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் திவ்யா ரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும், உடலில் மாற்றம் தெரிவதை உணர்ந்த திவ்யா பயத்தில் சத்தம்போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கணவர் பெல்லார்மின், அவரது பெற்றோர் ஆகியோர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, தனது மொபைல்போனில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து நிலைமையை கூறியுள்ளார்.

பெல்லார்மின்

விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸில் திவ்யா தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திவ்யா தந்தை சில்வெஸ்டர் கொடுத்த புகாரின் பேரில் திவ்யாவின் கணவர் பெல்லார்மின் மற்றும் அவரின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், வீட்டில் இறந்து கிடந்த நாய் மற்றும் மீதமிருந்த உணவுப் பொருள்களையும் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ``இறந்த திவ்வியாவிடம் இறுதி வாக்குமூலம் பெற்று, அதன் அடிப்படையில்தான் அவரின் கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளோம்" என தெரிவித்தனர்.


[X] Close

[X] Close