`என்னை மீட்டுட்டீங்க; என் குடும்பத்தின் வறுமையைப் போக்குங்க சார்!- அதிகாரிகளை கண்கலங்கவைத்த சிறுவன் | poor boy request to officer thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (07/03/2019)

`என்னை மீட்டுட்டீங்க; என் குடும்பத்தின் வறுமையைப் போக்குங்க சார்!- அதிகாரிகளை கண்கலங்கவைத்த சிறுவன்

கஜா புயலின் போது மரம் விழுந்ததில் நடராஜன் என்பவர் இறந்தார். அவரின் இறுதிச் சடங்கின் செலவுக்கு பணம் இல்லாததால் அவரது மகன் சூர்யாவை ரூ,6,000 பணத்துக்கு ஆடு மேய்ப்பதற்கு கொத்தடிமையாக அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர். தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சூர்யாவை மீட்டனர் அதிகாரிகள். `சார், என்னை மீட்டுட்டீங்க. என் குடும்பத்தையும் கஷ்டத்தில் இருந்து மீள உதவி செய்யுங்க சார்' என கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சிறுவன் சூர்யா

தஞ்சாவூர் அருகேயுள்ள மேல வன்னிப்பட்டு கிராமத்தில் கஜா புயலுக்குப் பிறகு10 வயது கொண்ட சூர்யா என்ற சிறுவன் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான். இதைப் பார்த்த அப்பகுதியினர், `ஏன் தம்பி படிக்கிற வயசுல ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்க' என பரிவுடன் கேட்டுள்ளனர். அதற்கு சூர்யா சொன்ன பதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ``எனக்குச் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம். கஜா புயல் அடிச்சப்ப எங்க அப்பா மேல் மரம் முறிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்து விட்டார். அவரின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்தனர் எங்கள் குடும்பத்தினர். இதனால் பொட்டலங்குடி என்ற ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் பேசி ரூ.6,000 முன் பணம் பெற்றனர். பின்னர் அப்பாவின் காரியங்கள் முடிந்த பிறகு நான் இங்கு ஆடு மேய்ப்பதற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசக் கூட இல்லை. அப்பா சடலமாக கிடக்கும்போது அவரை அடக்கம் செய்வதற்கு வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. அதான் என்னை கொத்தடிமையாக அனுப்பி வைத்து விட்டனர்'' என்று கூறியுள்ளான்.

அதன் பிறகு சூர்யாவின் நிலை குறித்து தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ சுரேஷ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி சூர்யாவை மீட்டனர். அவர்களிடம் சூர்யா, `எல்லோருக்கும் கஷ்டம் வரும் சார். ஆனா புயலடிச்ச சமயத்துல எங்களுக்கு வந்த கஷ்டம் பெரும் கொடுமை. ஒரு பக்கம் அப்பா சடலமாக கிடத்தப்பட்டு இருக்கு. மறுபக்கம் கண்ணீரும் கம்பலையுமாக என் குடும்பம் நின்றது பெரும் துயரம். அவரின் இறுதிச் சடங்கை செய்வதற்கே பெரும் போராட்டமாகிப் போனது சார். என்னை மீட்டதற்கு நன்றி சார். எங்க குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்க உதவி செய்யுங்க சார்'' என கேட்டது அனைவரின் கண்களையும் ஈரமாக்கியது. இந்த நிலையில், சூர்யாவுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 20,000 வழங்குவதற்கும், குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்து கல்வி, மறுவாழ்வு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close