`வேளச்சேரி இன்ஸ்பெக்டரை ஃபாலோ செய்யுங்கள்!'- எதற்கு சொன்னார் கமிஷனர் விஸ்வநாதன்? | Follow Inspector velu, said Police commissioner

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (07/03/2019)

கடைசி தொடர்பு:14:19 (07/03/2019)

`வேளச்சேரி இன்ஸ்பெக்டரை ஃபாலோ செய்யுங்கள்!'- எதற்கு சொன்னார் கமிஷனர் விஸ்வநாதன்?

கமிஷனர் விஸ்வநாதன்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் இறகுப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை மற்றும் ஓய்வு நேரங்களில் இந்த மைதானத்தில் இறகுப்பந்து விளையாட்டில் ஆர்வமாக பலர் ஈடுபட்டுள்ளனர். உள்விளையாட்டரங்கத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்துவைத்தார். 

சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர் பிரதான சாலையில் வேளச்சேரி காவல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தக் காவல் நிலையம், தரைமட்டத்திலிருந்து 3 அடி பள்ளமாக இருந்ததால் கடந்த 2015-ல் பெய்த கன மழையால் காவல் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், அந்த இடத்தில் இரண்டு மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு 2018-ல் திறக்கப்பட்டது. காவல் நிலையத்தின் அருகே 1,800 சதுரஅடி காலி இடம் இருந்தது.

கமிஷனர்விஸ்வநாதன்

இந்தச்சமயத்தில்தான் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ஒவ்வொரு காவல் நிலையமும் பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி தரமணி காவல் நிலையத்தில் அழகான கார்டன் அமைக்கப்பட்டது. மூலிகைச் செடிகள், காய்கறிகள், நடைப்பயிற்சிக்கான இடம் என பசுமை காவல் நிலையமாக மாற்றப்பட்டது. தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக வேளச்சேரி காவல் நிலையத்தில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் அப்போதையை கிண்டி சரக உதவி கமிஷனர் பாண்டியன், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸ் டீம் ஈடுபட்டது. இன்ஸ்பெக்டர் வேலுவின் துரித முயற்சியால் இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் முழுமையாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

தற்போது உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும் அவர்களால் செயல்படுத்தப்பட்ட உள்விளையாட்டரங்கத்தில் விளையாட்டுப் பயிற்சியில் பலர் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். உள்விளையாட்டரங்கத்தையொட்டி காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான தியானப் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் தியானப்பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மனஅழுத்தம் குறைந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். வேளச்சேரி காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், அங்கு அமைந்துள்ள உள்விளையாட்டரங்கை ஆர்வமாகப் பார்ப்பது வாடிக்கையாக உள்ளது.

கமிஷனர் விஸ்வநாதன்

உள்விளையாட்டரங்கை சில நாள்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார். அதோடு அந்தப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களையும் பயன்பாட்டுக்கு கமிஷனர்  கொண்டுவந்தார். திறப்பு விழாவுக்கு வந்த போலீஸ் கமிஷனர்  பேட்டை எடுத்து விளையாடி தொடங்கி வைத்தார். விழாவில் கலந்துகொண்டவர்கள் கமிஷனர் விளையாடியதை ஆர்வமாக கண்டுரசித்தனர். விழாவில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசும்போது, `இன்ஸ்பெக்டர் வேலு, பொதுமக்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். இதனால்தான் பொதுமக்களின் பங்களிப்பில் இந்த உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் வேலுவைப் போல மற்றவர்களும் செயல்பட வேண்டும்' என்று கூறியதும் அங்குள்ள காவலர்கள் உற்சாகமாக கைதட்டினர்.

கமிஷனர் விஸ்வநாதன்

வேளச்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா மூலம் காவலர்கள் கண்காணித்துவருகின்றனர். இதனால் வழக்குகள் துப்பு துலங்குவதாகவும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் வேளச்சேரி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேளச்சேரி போலீஸார் கூறுகையில், ``பொதுமக்களின் பங்களிப்போடு இந்த உள்விளையாட்டரங்கத்தை அமைத்துள்ளோம். உள் விளையாட்டரங்கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா, தியானப் பயிற்சிகளும் இங்கு மேற்கொள்ளலாம். திறப்பு விழாவுக்கு வந்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் வேளச்சேரி காவலர்களை பாராட்டினார்" என்றனர்.


[X] Close

[X] Close