என்னாது... எழுத்தாளர் ஜெயமோகன் டாக்டரா? - 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் குளறுபடிகள் | is jeyamohan a doctor? 11 stranded question paper issues

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (07/03/2019)

கடைசி தொடர்பு:13:45 (07/03/2019)

என்னாது... எழுத்தாளர் ஜெயமோகன் டாக்டரா? - 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் குளறுபடிகள்

கேள்வித்தாள்

11-ம் வகுப்புக்கு நடந்துகொண்டிருக்கும் பொதுத்தேர்வில், தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் ஆசிரியர்கள் மத்தியில் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான சிவகுருநாதன் கூறுகையில், நேற்று தொடங்கிய ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வில் முதல் தேர்வான தமிழ் முதல் தாள் வினாத்தாளைப் பார்க்கும்போது, பாடநூலைப் போன்றே இதுவும் பிழைகளுடன் தயார் செய்திருப்பது தெரிகிறது. சென்ற ஜூன் மாதம் முதல் புழக்கத்திலுள்ள பாடநூலில் உள்ள பிழைகளைக் களைந்திருந்தால், அப்பிழைகள் பொதுத்தேர்வில் தொடர்வதைத் தவிர்த்திருக்க முடியும். பாடநூல் பிழைகளைச் சுட்டிக்காட்டியும், அவற்றைக் களைவதில் கல்வித்துறையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் (SCERT) ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டன. சரி, நேற்றைய வினாத்தாளில் உள்ள குளறுபடிகளைப் பார்ப்போம். 

வினா எண்: 3 

யாரோ உனைப்போல் அனுதினம் உழைப்போர்? - இது எவர் மொழி?

(அ) நடராசன்                       (ஆ) புல்

(இ) வாய்க்கால்                      (ஈ) நாங்கூழ்

வினா ‘எவர் மொழி’ என உயர்திணையைச் சுட்டுவதால் ‘நடராசன்’ என்னும் விடை மட்டுமே பொருத்தமானது என உணரமுடியும். பிற மூன்று விடைக்குறிப்புகளும் அஃறிணைகள். இவ்வளவு வெளிப்படையாகவா வினாக் குறிப்பது? 

வினா எண்: 8

ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்:

(அ) வெண்சீர்                       (ஆ) கனிச்சீர்

(இ) ஆசிரிய உரிச்சீர்                 (ஈ) வஞ்சியுரிச்சீர்

``எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்?” போன்று எளிமையாக வினா கேட்க வேண்டும், அதற்கேற்ப விடைக்குறிப்புகள் அமைய வேண்டும் என்று வினாத்தாள் எடுத்தவர் சபதமேற்றிருப்பார் போலும்! என்ன செய்வது?  

கேள்வித்தாள்


வினா எண்: 9

பொருந்தாதைக் கண்டறிக.

(அ) யானை டாக்டர்  - டாக்டர் ஜெயமோகன்

(ஆ) செவ்வி         - நர்த்தகி நடராஜ்

(இ) பிம்பம்          - பிரபஞ்சன்

(ஈ) வாடிவாசல்      - அ.முத்துலிங்கம்

நாவல், சிறுகதை எழுதும் எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா (உரையாடலாசிரியர்) ஜெயமோகனுக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிய வினாத்தாளுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்! இருப்பினும் ‘யானை டாக்டர்’ எழுதியதால் கால்நடை மருத்துவரா அல்லது மனித மருத்துவரா என்னும் குழப்பம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது! ‘யானை டாக்டரை’ ஒரு டாக்டர் தான் எழுதமுடியும் என்கிற அசட்டுத்தனம் மற்றும் குருகுல மனப்பான்மையிலிருந்து கல்வி விடுவிக்கப்படுதல் காலத்தின் கட்டாயம். 

இவை போன்றும் இன்னும் சில குளறுபடிகளும் இருக்கின்றன. முதலில், இதுபோன்ற பிழைகளை ஒத்துக்கொள்ளும் மனநிலை வேண்டும். அடுத்தகட்டமாக இவ்வினாக்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இனி வருங்காலங்களில் இவை நிகழாமலிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கல்வி மற்றும் தேர்வுத்துறைகள் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( SCERT) ஆகியன வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்." என்கிறார் ஆசிரியர் சிவகுருநாதன். 


[X] Close

[X] Close