டி.எஸ்.பி மீது கிரிமினல் வழக்கு; சப்-கலெக்டர் மீது நடவடிக்கை! - ஆதாரங்களை அழித்த வழக்கில் நீதிபதி அதிரடி | Sub-Collector, DSP, who destroyed evidence in youth murder case -Vellore court takes action

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (07/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (07/03/2019)

டி.எஸ்.பி மீது கிரிமினல் வழக்கு; சப்-கலெக்டர் மீது நடவடிக்கை! - ஆதாரங்களை அழித்த வழக்கில் நீதிபதி அதிரடி

குடியாத்தம் அருகே இளம்பெண் கொலை வழக்கில், ஆதாரங்களை அழித்து குற்றவாளியை தப்பிக்கவைத்த டி.எஸ்.பி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், பொய்யான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்த சப்-கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேலூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

குடியாத்தம் டி.எஸ்.பி-யாக இருந்த பிரகாஷ்பாபு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35), ராணுவ வீரர். இவரின் மனைவி ரஞ்சனி (28). கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில், இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. கிரீஷ் (5), தனுஸ்ரீ (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வரதட்சணையாக ரூ.10 லட்சமும், மாமியார் வீட்டுச் சொத்துகளை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறும் கேட்டு மனைவியை, பெருமாள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ரஞ்சனி  கொலை செய்யப்பட்டார். மனைவி கொலையில், கணவன் பெருமாள் மீது சந்தேகம் எழுந்தது. இச்சம்பவம் குறித்து  குடியாத்தம் டி.எஸ்.பி-யாக இருந்த பிரகாஷ்பாபு விசாரணை நடத்தினார். கொலைக்குப் பயன்படுத்திய கயிறு உள்ளிட்ட தடயங்களைக் கைப்பற்றினார். ரஞ்சனி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை மாற்றிப் பதிவுசெய்தார். கொலைக்கான சாட்சியங்களை மறைத்து, கயிறு உள்ளிட்ட அத்தனை ஆதாரங்களையும் டி.எஸ்.பி பிரகாஷ்பாபு அழித்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடத்திய, அப்போதைய உதவி கலெக்டர் செல்வராஜும், டி.எஸ்.பி-க்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்தார். 

இந்த வழக்கு விசாரணை, வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கயிற்றால் கழுத்தை இறுக்கி ரஞ்சனி கொலை செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இளம்பெண் கொலை வழக்கை விசாரித்த சப்-கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி-க்கு சிக்கல் ஏற்பட்டது. வீட்டில் கைப்பற்றிய கயிற்றைச் சமர்ப்பிக்குமாறு, டி.எஸ்.பி பிரகாஷ்பாபுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதாரங்களை அழித்துவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த டி.எஸ்.பி பிரகாஷ்பாபு, ஓராண்டு கழித்து சமீபத்தில் வேறொரு கயிற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதை, நீதிமன்றம் கண்டுபிடித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. ``தடயங்களை அழித்து இளம்பெண் கொலை வழக்கைத் திசைதிருப்பி குற்றவாளியைத் தப்பவைத்த குற்றத்துக்காக டி.எஸ்.பி பிரகாஷ்பாபு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதுடன், துறை ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கவும், வழக்கைச் சரியாக விசாரிக்காமல் அறிக்கை தாக்கல் செய்த சப்-கலெக்டர் செல்வராஜ் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

மேலும், சாட்சியங்களை அழித்து வழக்கு விசாரணை திசை திருப்பப்பட்டதாலும், இளம்பெண் ரஞ்சனியைக் கொலை செய்தது, அவரின் கணவர் பெருமாள்தான் என்று குற்றம் நிரூபிக்கப்படாததாலும், பெருமாளை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். உயிரிழந்த இளம்பெண்ணின் தாயார் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். சர்ச்சையில் சிக்கியுள்ள டி.எஸ்.பி பிரகாஷ்பாபு, இப்போது திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் டி.எஸ்.பி-யாகப் பணிபுரிகிறார். அதேபோன்று, சப்-கலெக்டர் செல்வராஜ் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close