`யாருக்கும் நடக்கக் கூடாத துயரம் இது’ - அற்புதம்மாளின் போராட்டத்துக்கு வெற்றிமாறன் ஆதரவு | vetrimaran support to arputhammal rally

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (07/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (07/03/2019)

`யாருக்கும் நடக்கக் கூடாத துயரம் இது’ - அற்புதம்மாளின் போராட்டத்துக்கு வெற்றிமாறன் ஆதரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக தமிழகத்தில் ஒலித்துவருகிறது.

எழுவர் விடுதலையில், ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்துவந்தனர். இருந்தும் தற்போது வரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, எழுவர் விடுதலைக்குப் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார் அற்புதம்மாள். இதன் அடுத்தகட்டமாக, வரும் 9-ம் தேதி, தமிழகத்தின் ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளார்.

வெற்றிமாறன்

இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், ``வரும் மார்ச் 9-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தின் 7 நகரங்களில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. 28 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்துவிட்டார்கள். அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இன்னும் விடிவு வரவில்லை. 

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், ஆளுநர் மட்டும் இன்னும் அந்தக் கோப்பில் கையொப்பமிடவில்லை. கையொப்பமிடுவதில் ஏன் தாமதம் எனத் தெரியவில்லை அவரின் கையொப்பத்தை  வலியுறுத்தித்தான் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. இதில் நான் கலந்துகொள்ளவுள்ளேன். அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இது மனித உரிமை மீறல். யாருக்கும் நடக்கக்கூடாத துயரம். அவர்களின் விடுதலைக்காகப் போராடவேண்டியது நமது கடமை. இந்தப் போராட்டம் ஒரு அழுத்தமாக மாறி ஆளுநர் கோப்புகளில் கையொப்பமிட வேண்டும். எழுவர் விடுதலைக்கான இறுதிப் போராட்டமாக இது இருக்க வேண்டும் என்பதே என் ஆசை’ எனத் தெரிவித்துள்ளார். 

 

 


[X] Close

[X] Close