சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை  - ச.ம.க தனித்துப் போட்டியிட என்ன காரணம்?   | Reason behind sarath kumar decision for up coming election

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:47 (16/03/2019)

சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை  - ச.ம.க தனித்துப் போட்டியிட என்ன காரணம்?  

சரத்குமார்

ச.ம.க தனித்துப் போட்டியிடுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால் சரத்குமார், ராதிகா சரத்குமார் போட்டியிடவில்லை என்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி  இறுதியாகிவிட்டது. தி.மு.க. 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.மக., பா.ஜ.க., புதிய தமிழகம் கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

சென்னையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் விஜயகாந்த் அல்லது பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி இறுதியாகாததால் தே.மு.தி.க. தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து தே.மு.தி.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம் என அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூறிவருகிறது. கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் தலைமையில் தொடர் ஆலோசனையில் தே.மு.தி.க-வினர் ஈடுபட்டுள்ளனர். 

தே.மு.தி.க. தொண்டர்களின் மனநிலை மதில் மேல் பூனையாக இருந்துவரும் சூழலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக சரத்குமார் தைரியமாக அறிவித்துள்ளார். சரத்குமாரின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்தக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பவர்கள் ஆர்வமாக விருப்ப மனுக்களை கட்சித் தலைமையில் கொடுத்துவருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

ராதிகா சரத்குமார்

ச.ம.க தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்ததன் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``சமத்துவ மக்கள் கட்சியின் செல்வாக்கை இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிரூபிக்க உள்ளோம். இதனால் தமிழகம், புதுச்சேரியில் ச.ம.க-வின் தலைவர் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய, மாநில அரசுகளை விமர்சித்துதான் பிரசாரம் செய்ய உள்ளோம். இந்தத் தேர்தலில் வெற்றி என்பது எங்களின் இலக்கு அல்ல. எங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டு வங்கி எவ்வளவு என்பது இந்தத் தேர்தலில் தெரிந்துவிடும். அதன்பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

 தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு வெளியானதும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறோம். வடசென்னையைப் பொறுத்தவரை, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சேவியர், தென்சென்னை தொகுதியில் மாணவரணி மாநிலச் செயலாளர் அக்வின் நோயல், தூத்துக்குடியில் துணைப் பொதுச்செயலாளர் சுந்தர், விருதுநகரில் காமராஜரின் கொள்ளுப்பேரனும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன், கோவையில் துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், நெல்லையில் துணைப் பொதுச் செயலாளர் கணேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்களைப் பெற்ற பிறகு நேர்காணல் நடத்தி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விரைவில் சரத்குமார் வெளியிடுவார்" என்றார். 

சரத்குமார் எடுத்த முடிவை கட்சியினரும் தொண்டர்களும் வரவேற்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சரத்குமாரிடம் பேசிய சில கட்சித் தலைவர்கள், கூட்டணிக்கு அழைப்புவிடுத்துள்ளனர். அவர்களிடம் இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல, தொண்டர்களின் முடிவு. இதனால் தனித்துப் போட்டியிட்டு எங்களின் செல்வாக்கை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் சில கண்டிஷன்களைக் கடைப்பிடிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படிதான் சமத்துவ மக்கள் கட்சியில் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close