`துரைமுருகன் பேசியதைச் சொன்னால் அசிங்கமாகிவிடும்' - பிரஸ்மீட்டில் கொந்தளித்த சுதீஷ்! | lk sudhish explains about duraimurugan meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:47 (16/03/2019)

`துரைமுருகன் பேசியதைச் சொன்னால் அசிங்கமாகிவிடும்' - பிரஸ்மீட்டில் கொந்தளித்த சுதீஷ்!

தி.மு.க பொருளாளர் துரைமுருகனை நேற்று தே.மு.தி.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக, தேர்தல் கூட்டணியில் குழப்பம் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியது. இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பேசிய துரைமுருகன், `விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தொலைபேசியில் என்னிடம் பேசினார். என்ன என்று நான் அவரிடம் கேட்டேன். `நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விரும்புகிறோம்’ என்றார். நான், `எங்களிடம் சீட் இல்லை. எங்கள் தலைவர் ஊரில் இல்லை. நீங்கள் அ.தி.மு.க-வுடனும் பேசிவிட்டு எங்களிடமும் பேசினால் என்ன செய்ய முடியும், எங்களிடம் சீட் இல்லை. இப்போ கேட்டு என்ன பயன்? ஏன் நீங்கள் அங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர்களின் பேச்சில் சரியான பதில் இல்லை. நான் தெளிவாகக் கூறிவிட்டேன். சீட் இல்லை என்றேன்" என்றார். 

துரைமுருகன்

இந்நிலையில் நேற்று துரைமுருகனை சந்தித்தது குறித்து தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் பேசிய சேலம் தே.மு.தி.க செயலாளர் இளங்கோ, ``துரைமுருகனை மரியாதை நிமித்தமாக பெர்ஷனல் விஷயமாகச் சந்திக்கச் சென்றோம். இன்றைய அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு வேறுமாதிரி திசை திருப்பப்பட்டிருக்கிறது. பெர்ஷனல் விஷயமாகவே நானும் அனகை முருகேசனும் பார்க்கச் சென்றோமே தவிர இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் சந்திப்புக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. துரைமுருகன் மீடியாக்களிடம் சொன்னதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நேற்றைய சந்திப்பில் நாங்கள் அரசியல் பேசவே இல்லை. அவரிடம் கூட்டணி குறித்துப் பேசவில்லை. சுதீஷ் பியூஷ்கோயலை சந்திக்கச் சென்றது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் துரைமுருகனை சந்திக்கச் சென்றதும் சுதீஷுக்குத் தெரியாது. இது எல்லாம் எதிர்பாராதவிதமாக நடந்தது" என்றார். 

சுதீஷ்

இதன்பின் பேசிய சுதீஷ், ``துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகவே எங்கள் மாவட்டச் செயலாளர்கள் சந்தித்தனர். தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை முதன் முதலில் பா.ஜ.கவுடன்தான் நாங்கள் பேசினோம். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி எனப் பா.ஜ.க சொன்ன பிறகு சிறிது தாமதத்துக்குப் பின்புதான் அ.தி.மு.கவுடன் பேசினோம். நாங்கள் பேசிய மறுநாளே பா.ம.க உடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டனர் அ.தி.மு.க-வினர். பா.ம.க-வுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோதே எங்களையும் சேர்த்து ஒப்பந்தம் போட்டிருக்கலாமே என்பதுதான் எங்கள் வருத்தம். இதை அ.தி.மு.க, பா.ஜ.க-விடம் தெரிவித்துவிட்டோம். எல்லாரும் சேர்ந்து ஒரே நேரத்தில் கையெழுத்துப் போட்டிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. இரண்டு நாள் கழித்து தி.மு.க-விடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி உடன்பாடு சரியில்லை என்றால் எங்களிடம் வாருங்கள் என எங்களைக் கூப்பிட்டார்கள். அப்போது துரைமுருகனும் என்னிடம் பேசினார். இது எல்லாம் 10 நாள்களுக்கு முன்பு நடந்தது. 

சுதீஷ்

அதன்பிறகு நான் அவரிடம் பேசவில்லை. நாங்கள் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி பேசி வருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாள்களில் தொகுதிகள் குறித்து அறிவிப்போம்" என்றவரிடம் துரைமுருகன் பேசியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி பேசக்கூடாது என்பது இல்லை. நாங்கள் தலைவர் கேப்டன் வழியில் வந்தவர்கள். உள்ளுக்குள் பேசியதை அவர்களைப் போல் வெளியில் சொல்ல மாட்டோம். துரைமுருகனும், நானும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். என் பக்கத்து ஊர்க்காரர் தான். பலமுறை அவர் என்னிடம் பேசியுள்ளார். துரைமுருகன் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் என்ன ஆகும். அவரது கட்சி பற்றி, தலைமை பற்றி அவர் என்னிடம் என்ன பேசினார் என்பதைச் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும். கட்சியின் நாகரிகம் கருதி அதைப் பேச விரும்பவில்லை" என்றார். 

தொடர்ந்து உங்கள் நிர்வாகிகள் சந்தித்ததை ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருப்பதால் கூறவில்லை என துரைமுருகன் கூறியது குறித்துக் கேட்டதற்கு, ``ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் எதைப்பற்றியும் கவலை கிடையாது. அவர் தூங்கிக்கொண்டுதான் இருப்பார். ஸ்டாலின் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் எனக்கு ஒன்றுமில்லை" என்றார்.

சுதீஷ் பேட்டி தொடர்பாக பேசிய துரைமுருகன், ``தே.மு.தி.கவினர் மாற்றி மாற்றி பேசுவார்கள் என நான் நினைக்கவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே அவர்கள் இப்படி பேசியுள்ளனர். தனிப்பட்ட முறையில் அவர்கள் என்னிடம் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நேற்று நான் காரில் வந்துகொண்டிருக்கும் போது சுதீஷ் என்னிடம் பேசினார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close