குண்டடி காயத்துடன்  தப்பிய மாவோயிஸ்ட்! - தமிழக - கேரள எல்லையில் ரோந்துப் பணிகள் தீவிரம் | The Nilgris police increased patrolling in TN - Kerala border

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (07/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (07/03/2019)

குண்டடி காயத்துடன்  தப்பிய மாவோயிஸ்ட்! - தமிழக - கேரள எல்லையில் ரோந்துப் பணிகள் தீவிரம்

குண்டடி காயத்துடன் மாவோயிஸ்ட் ஒருவர் தப்பியிருப்பதால், தமிழக - கேரள எல்லையோர மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீலகிரி எஸ்.பி. அலுவலகம்

கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடி பகுதியில், நேற்று இரவு கேரள தண்டர்போல் போலீஸாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதில், மாவோயிஸ்ட் ஒருவர் இறந்துள்ளார். அவரது உடலை அதிகாலை வனப்பகுதியில் கண்டுபிடித்ததாகவும், மற்றொருவர் குண்டடி காயத்துடன் தப்பியதாகவும் கேரள போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுடன் கேரள எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்ததன் காரணமாக, தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் வனப் பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணியில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டதில் 16 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி எஸ்.பி சண்முகப்பிரியா

இதுகுறித்து நீலகிரி எஸ்பி சண்முகப்பிரியா கூறுகையில், ``கேரள எல்லையை ஒட்டியுள்ள பாட்டவயல், சேரம்பாடி, நம்பியார் குன்னு உள்ளிட்ட 6  சோதனைச் சாவடிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள 8 வழிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம், துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் குண்டடி காயத்துடன் தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது .இதைத் தொடர்ந்து, எல்லையோரத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கண்காணிக்கப்படுகின்றன’’என்றார்.


[X] Close

[X] Close