‘போர்டிங் பாஸுடன் வந்தால் டெல்லி செல்லலாம்’ - தே.மு.தி.க-வுக்கு அழைப்பு விடுக்கும் ஜெயக்குமார் | minister jayakumar criticize dmk

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:48 (16/03/2019)

‘போர்டிங் பாஸுடன் வந்தால் டெல்லி செல்லலாம்’ - தே.மு.தி.க-வுக்கு அழைப்பு விடுக்கும் ஜெயக்குமார்

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக, தி.மு.க - தே.மு.தி.க -அ.தி.மு.க கட்சிகளுக்கிடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களின் கூட்டணியை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது தே.மு.தி.க மட்டும் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளது. 

தேமுதிக

இதற்கிடையில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க கூட்டணிகுறித்து நேற்று பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.  இது தொடர்பாக இன்று சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ நேற்று தி.மு.க நடந்துகொண்ட விதம்  அரசியல் நாகரிகம் இல்லாத செயல். தே.மு.தி.க-வை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. அரசியல் கட்சிகளில் பேச்சுவார்த்தை என்பது மிகவும் சாதாரணமான விஷயம். அதை வெளிப்படையாகப் பேசி அவமானப்படுத்துவது நாகரிகம் இல்லை. நான் யாருக்கும் பரிந்துரைத்துப் பேசவில்லை, அரசியல் கட்சிகளுக்குள் பேசும் விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது. ஆனால், சொல்லக் கூடாததைச் சொல்லியுள்ளனர் என்றால், அந்த அளவுக்கு தி.மு.க அரசியல் நாகரிகமற்ற கட்சியாக உள்ளது. 

ஜெயக்குமார்

பெருத்த அவமானத்தைச் சந்தித்துள்ள தே.மு.தி.க, நிச்சயமாக இனி வாழ்நாள் முழுவதும் எந்த நிலையிலும் அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அதே நேரத்தில், எங்களுடைய கூட்டணிக் கதவுகளை நாங்கள் மூடவில்லை, தே.மு.தி.க வரட்டும், பேசட்டும். நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும்.  போயிங் 747 விமானம் டெல்லிக்குப் புறப்படத் தயாராக உள்ளது. அனைவரும் அமர்ந்துவிட்டோம். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இப்போது டிக்கெட்டுகளும் கொடுத்தாகிவிட்டது. போர்டிங் பாஸ் மட்டும் எடுத்துக்கொண்டு தே.மு.தி.க உள்ளே வந்தால் மட்டுமே போதும். எனவே, இதில் முடிவுசெய்யவேண்டியது தே.மு.தி.க-தான்.

அரசியலில் பேச்சுவார்த்தை என்பது இயல்பு. யாரையும் யாரிடமும் பேசக் கூடாது என கட்டாயப்படுத்தக் கூடாது. எங்களின் ஆஃபரை நாங்கள் சொல்லிவிட்டோம். இனி முடிவெடுக்கவேண்டியது அவர்கள்தான். தே.மு.தி.க போர்டிங் பாஸ் எடுத்துவிட்டால், அ.தி.மு.க கூட்டணியில் உள்ள 40 பேரும் டெல்லி செல்லவேண்டியது மட்டும்தான் பாக்கி. வருவது நல்லது. அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கூட்டணி, தனித்துப் போட்டி ஆகியவற்றைத் தே.மு.தி.க-தான் முடிவுசெய்ய வேண்டும். எங்களைப் பொறுத்த வரை பலமான கூட்டணி எங்களிடம் உள்ளது.  அனைவரையும் அரவணைத்து, ஒறுமித்த கருத்தோடு செல்ல வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். அதை மீறி அவர்கள் விரும்புவதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  ஸ்டாலினுக்கே, ஜெயலலிதா பேரை சொன்னால்தான் ஓட்டு கிடைக்கும் நிலை உள்ளது. எங்கள் தலைவர், தற்போது அவர்கள் தலைவராக மாறிவிட்டார். ஜெயலலிதா எங்கள் காவல் தெய்வம். அவர் எங்களுடன் இருக்கும்போது எங்களுக்கு தோல்வி இல்லை” என்று பேசினார்.
 


[X] Close

[X] Close