மணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்!- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ் | Ariyalur Police arrests 3 over protest against sand quarry

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/03/2019)

கடைசி தொடர்பு:17:46 (07/03/2019)

மணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்!- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ்

கொள்ளிடத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை உடனே மூடக்கோரி மூன்று பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் குவாரி

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல மாதங்களாகவே பல்வேறு வடிவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்தோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து குவாரியில் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் மெத்தனமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திருமானூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மணல் குவாரியை நிறுத்தக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரியில் போராட்டம்

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுகையில், ``திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மணல்களை அள்ளுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். மேலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மணல் குவாரி

காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருமானூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அக்குழுவைச் சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபால் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


[X] Close

[X] Close