`குழந்தைக்கு சிகிச்சை அளித்தோம், மறுகணமே இறந்துவிட்டது!'- அரசு டாக்டரால் கொந்தளித்த உறவினர்கள் | New born baby died at tirupur government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (07/03/2019)

கடைசி தொடர்பு:18:11 (07/03/2019)

`குழந்தைக்கு சிகிச்சை அளித்தோம், மறுகணமே இறந்துவிட்டது!'- அரசு டாக்டரால் கொந்தளித்த உறவினர்கள்

திருப்பூரில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்ததாகக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாக்டரின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி போராட்டம் நடத்தும் உறவினர்கள்

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள் தங்கராஜ் - சுகன்யா தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்குக் கடந்த செவ்வாய்க் கிழமை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகன்யாவை அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் சென்றதும் அங்கு சுகன்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் சுகன்யாவின் பனிக்குடம் உடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர்
நேற்றைய தினம் காலை சுகன்யாவுக்கு சுகப்பிரசவமாக குழந்தை பிறந்திருக்கிறது. இருப்பினும் குழந்தையைப் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் காண்பிக்காமல், குழந்தைக்கு மூச்சுச் திணறல் இருப்பதாகக்கூறி, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படியே இரண்டு நாள்களாகக் குழந்தையைக் காண்பிக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மேல் சிகிச்சை அளித்துக்கொள்கிறோம் எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், கோவை வரை அழைத்துச் செல்வது சிரமம் எனக்கூறி வேண்டாம் என்ற மருத்துவர்கள், அடுத்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டம் நடத்த தொடங்கினார்கள். சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இறந்திருப்பதாகவும், எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றுகூறியும் இறந்த குழந்தையின் சடலத்தைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


[X] Close

[X] Close