மசினகுடி வனப் பகுதியில் தீ வைத்த நபர்! - வளைத்துப் பிடித்த வனத்துறை | Forest department arrests one over Masinagudi forest fire

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (07/03/2019)

கடைசி தொடர்பு:19:20 (07/03/2019)

மசினகுடி வனப் பகுதியில் தீ வைத்த நபர்! - வளைத்துப் பிடித்த வனத்துறை

நீலகிரி மாவட்டம், மசினகுடி வனப்பகுதியில் தீ வைத்த மர்ம நபரை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவரை சிறையில் அடைத்தனர் வனத்துறையினர்.

மசினக்குடி வனப்பகுதி

முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலப் பகுதியில் பொக்காபுரம், மன்றாடியார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் முதுமலையில் சுமார் 95 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. காட்டுத் தீ வைத்த மர்மநபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் காட்டில் தீ வைத்தவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என வனத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மசினகுடி வனச்சரகத்துக்குட்பட்ட அவரள்ளா, மாவனல்லா வனப்பகுதியில் வன ஊழியர்கள், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது வனத்திற்கு மர்மநபர் ஒருவர் தீ வைப்பதை பார்த்தனர்.  அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து மசினகுடி வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். வனச்சரகர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார்.

வனத்துக்கு தீ வைத்த நபர் கைது

விசாரணையில் அந்த நபர் மசினகுடியைச் சேர்ந்த சுந்தரன் (45) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து காட்டுத் தீ ஏற்படுத்த முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ``வனத்தில் காட்டுத் தீ ஏற்படுத்துவது வனச்சட்டத்தின் படி கடுமையான குற்றமாகும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


[X] Close

[X] Close