`வெற்றிக்கூட்டணி என்றால் அது எங்கள் கூட்டணிதான்!’ - தமிழிசை | We will win 40 seats in TN and puducherry says Tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (16/03/2019)

`வெற்றிக்கூட்டணி என்றால் அது எங்கள் கூட்டணிதான்!’ - தமிழிசை

“ஸ்டாலின் வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், நாங்கள் நல்ல திட்டங்களைத் தந்து கொண்டிருக்கிறோம். வெற்றிக்கூட்டணி என்றால், அது எங்கள் கூட்டணிதான்” என பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

``ஸ்டாலின் வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், நாங்கள் நல்ல திட்டங்களைத் தந்து கொண்டிருக்கிறோம். வெற்றிக் கூட்டணி என்றால் அது எங்கள் கூட்டணிதான்” என தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க மற்றும் புதிய தமிழகம் கட்சி கூட்டணியில், பா.ஜ.க-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால், எந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். பா.ஜ.க தரப்பில் கேட்கப்பட்ட 5 தொகுதிகளில், அ.தி.மு.க கூறிய பட்டியலில் தென்சென்னை வரவில்லை என்பதால், தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட முடிவுசெய்து, அத்தொகுதி கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அத்தொகுதி, அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகுதியை ஒதுக்க முடியாது என அ.தி.மு.க மறுப்பு தெரிவித்தது என்கிறார்கள். தமிழிசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால், அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜெயகுமார் ``பா.ஜ.க-விற்கு விட்டுத்தர முடியாது” என திட்டவட்டமாகச் சொல்ல, தமிழிசை தூத்துக்குடி தொகுதியைத் தேர்வுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழிசை

``தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க போட்டியிடுகிறதா?” என இரண்டு நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குகூட, “இந்தத் தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்” எனக் கூறினார். இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க மற்றும் புதிய தமிழகம் சேர்ந்துள்ள இந்த மெகா கூட்டணி, தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். “நாற்பதும் நமதே, நாடும் நமதே” என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு ஏற்ப, மிக வலிமையாக தமிழகம் முழுவதும் நாங்கள் பணியாற்றிவருகிறோம். நேற்று நடைபெற்ற விருதுநகர் மாநாட்டில், ஸ்டாலின் ஒருவித பதற்றத்துடனேயே பேசினார். அவர் பேசியதில் எதுவும் உண்மையில்லை. ஸ்டாலின் வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், நாங்கள் நல்ல திட்டங்களைத் தந்துகொண்டிருக்கிறோம். வெற்றிக் கூட்டணி என்றால், அது எங்கள் கூட்டணிதான்.

தமிழிசை

தே.மு.தி.க, கூட்டணி உடன்பாட்டைப் பொறுத்தவரை அவர்கள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகையில், மிக நேர்மையாகவே நடந்துகொண்டனர். அதுமட்டுமில்லாமல், சகோதரர் சுதீஷ் ஆரம்ப காலத்திலிருந்தே பா.ஜ.க கூட்டணியில்தான் இடம்பெறப்போகிறோம் எனத் தெளிவாக சொல்லியிருந்தார். பேச்சுவார்த்தையும் அதை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருந்தது. எனவே, இன்னும் இரண்டு மூன்று நாள்களில் கூட்டணி உறுதியாகும். தூத்துக்குடி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். அவ்வாறு ஒதுக்கப்பட்டால், பா.ஜ.க, இந்தத் தொகுதியில் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் நான் வேட்பாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. இது, எனக்கு பரிச்சயமான தொகுதி. அதனால், இங்கு அடிக்கடி வந்து செல்கிறேன். தமிழகத்தில் பனைத் தொழில் நலிவடைந்துகொண்டே போகிறது. பனைத் தொழிலைப் பெருக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் பிரசார அறிக்கை தயரிக்கப்பட உள்ளது. அதில், பனைத்தொழிலை மேம்படுத்துவதுகுறித்த திட்டங்களையும் இணைக்க உள்ளோம்” என்றார்.

தமிழிசை

 ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 15 கிராமங்களில், பா.ஜ.க கொடிகளை ஏற்றிவைத்து, மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகள் குறித்துப் பேசினார். தமிழிசை, வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், அதற்குத் தகுந்தபடி பேசிவருகிறார். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் அவருக்கு அளிக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, அவர் தேர்தல் பிரசாரத்தைத்  தொடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close