`கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவதில் மட்டும்தான் கில்லாடி; அரசியல்ரீதியாக மோடி வீக்!’ -கே.எஸ்.அழகிரி | Congress leader KS Alagiri slams PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (07/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (16/03/2019)

`கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவதில் மட்டும்தான் கில்லாடி; அரசியல்ரீதியாக மோடி வீக்!’ -கே.எஸ்.அழகிரி

`பிரதமர் மோடி, கூட்டணிக் கட்சியை மிரட்டுவதில்தான் பலசாலியாக இருக்கிறார். அரசியல்ரீதியாக அவர் பலமில்லாதவர்” என தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி

மதச்சார்பற்ற கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வரும் 13-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர், பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் இடங்களைத் தேர்வுசெய்வதற்காக, காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத், தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் தூத்துக்குடிக்கு விமானம்மூலம் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “எங்களது கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. தமிழகத்தின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இக்கூட்டணியை அமைத்திருக்கிறோம். இது, அ.தி.மு.க கூட்டணியைப் போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.

பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டம்

நாட்டின் பாதுகாப்பை அரசியலாக்கும் பிரதமர் மோடி, அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறார். ரஃபேல் விவகாரத்தில்,  மத்திய அரசாங்கம் முறையான ஆவணங்களை தவறவிட்டு இருக்கிறது. அப்படி தவறவிடுவது நியாயமா? என உச்ச நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்களுடைய ஊழல் சென்றிருக்கிறது. காமராஜரும் மோடியும் ஒன்று என தமிழிசை சொல்கிறார். காமராஜரை உயிரோடு எரிப்பதற்காக முயற்சிசெய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள். தமிழிசைக்கு இப்படி கூறுவதற்கு எப்படி வாய்வந்ததோ தெரியவில்லை.

அ.தி.மு.க-வுடனான அவர்களது கூட்டணி என்பது, நேசமான கூட்டணி அல்ல. மிரட்டிப் பணியவைக்கப்பட்ட கூட்டணி. கூட்டணிக்கட்சிகளை மிரட்டிப் பணியவைப்பதில்தான்  பிரதமர் மோடி பலசாலியாக இருக்கிறார். அரசியல்ரீதியாக அவர் பலமில்லாதவர். காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதி  என்பதை இன்னும் இரண்டு தினங்களில் முடிவுசெய்ய இருக்கிறோம். ஒருவேளை, ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம். இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் என அனைவரும் பங்கேற்கிறார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close