`அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்த்தா எப்படி?’ - அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய திருப்பூர் கிராம மக்கள் | Tiruppur village people donated some must needed goods to government school

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (08/03/2019)

கடைசி தொடர்பு:07:50 (08/03/2019)

`அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்த்தா எப்படி?’ - அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய திருப்பூர் கிராம மக்கள்

திருப்பூர் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கல்விச் சீர்வரிசை வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய ஊர் மக்கள்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் இயங்கி வருகிறது மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. 1964-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்தநிலையில் இன்றைய தினம் அப்பகுதி மக்கள் மற்றும் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் அப்பள்ளிக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாகத் தரப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலிலிருந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சீர்வரிசைகளுடன் அரசுப் பள்ளியை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அதில் பள்ளிக்கூடத்துக்கு தேவையான இருக்கைகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா - பென்சில்கள் மற்றும் இதர டிஜிட்டல் உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கியிருந்தன. பெரும் மகிழ்ச்சியுடன் ஊர்வலமாகச் சென்று அந்த சீர்வரிசைப் பொருள்களைப் பள்ளிக்கூடத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுபற்றிப் பேசிய மாணவர்களின் பெற்றோர், ``இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் திறம்பட இயங்கி வருகிறது.
மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதிலும், அவர்களின் எதிர்காலத்துக்கு வழி காட்டுவதிலும் இங்குள்ள ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இருப்பினும் பள்ளிக்கூடத்துக்குத் தேவையான சிலபல அத்தியாவசியப் பயன்பாட்டுப் பொருள்கள் இல்லாமலேயே பள்ளிக்கூடம் இத்தனை காலமாக இயங்கி வந்தது. அதனால்தான் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், இதே பகுதியில் வசிக்கும் பொதுமக்களுமே இணைந்து பள்ளிக்கூடத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தரலாம் என முடிவு செய்தோம். அதற்காக ஒருங்கிணைந்து திட்டமிட்டுப் பணிகளைச் செய்து, இன்றைய தினம் கல்விச் சீர்வரிசை வழங்கியுள்ளோம்" என்றனர்.

ஊர்மக்கள் ஒன்றுகூடி கல்விச் சீர்வரிசை வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.


[X] Close

[X] Close