`தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஆகியோரை அட்ரஸ் இல்லாமல் ஆக்க வேண்டும்!’ - குஷ்பு | AICC's Kushboo slams OPS and EPS

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:51 (16/03/2019)

`தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஆகியோரை அட்ரஸ் இல்லாமல் ஆக்க வேண்டும்!’ - குஷ்பு

`மாநில அரசிலுள்ள இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., எங்கே இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. தேர்தலுக்குப் பின்னரும் அவர்களை அட்ரஸ் இல்லாமல் ஆக்குவது நமது பொறுப்பாகும். ஊழலுக்கும், நாற்காலியைக் காப்பாற்றுவதற்காக செயல்பட்டு வரும் அரசு நமக்கு வேண்டாம்.
மக்கள் நலனை விரும்பும் அரசையும், அரசியலையும்தான் நாம் விரும்ப வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

குஷ்பு

கன்னியாகுமரியில், வரும் 13-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். ராகுல் காந்தி வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது, ``தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற்ற போதெல்லாம், மத்தியிலும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த முறையும் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இங்குள்ள மக்களின் எழுச்சியைப் பார்த்து கன்னியாகுமரிக்கு 13-ம் தேதி வரும் ராகுல் காந்தி பிரம்மிக்க வேண்டும். அவருக்கு உறுதியான நம்பிக்கையை நாம் கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கூட்டம்

குமரி முதல் டெல்லி வரை காங்கிரஸ் வெற்றி தொடரும். பா.ஜ.க-வை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் ஒரு மேப்பை காண்பித்து, இதுதான் பா.ஜ.க என்பார்கள். ஒவ்வொரு முறை பேசும்போதும் மோடி, மோடி என்று மட்டுமே சொல்லுவார்கள். பா.ஜ.க என்று அவர்கள் சொல்லுவதில்லை. ஒரு நபரை மட்டுமே நம்பி பா.ஜ.க இருப்பதுபோல் கூறுகின்றனர். ஆனால் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்று எப்போதும் கூறுவார். கன்னியாகுமரி மக்கள் ஒவ்வொருவரின் பேச்சு, மூச்சாக காங்கிரஸ் இருக்கிறது. அடுத்த பிரதமர் ராகுல் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதற்கு ஏற்றார்போல், அந்த நம்பிக்கையை அவருக்குத் தர வேண்டும். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும். நம் கண் முன்னே வெற்றி என்பது மட்டுமே இருக்க வேண்டும். வேறு  எதுவும் இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கூட்டம்

ஒவ்வொரு தொகுதியிலும் பெறும் வெற்றி, தனிப்பட்ட நபரின் வெற்றி கிடையாது. அது, தலைவர் ராகுல் காந்தியின் வெற்றியாகும். வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்பட அனைத்து தரப்பிலும் வளர்ச்சி இருப்பதற்கு ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்.
மத்திய அரசு 6000 ரூபாயும், மாநில அரசு 2000 ரூபாயும் வழங்குவதாகச் சொல்கிறார்கள். மாநில அரசிலுள்ள ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ், எங்கே இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. தேர்தலுக்குப் பின்னரும் அவர்களை அட்ரஸ் இல்லாமல் ஆக்குவது நமது பொறுப்பாகும். ஊழலுக்கும், நாற்காலியைக் காப்பாற்றவும் செயல்பட்டு வரும் அரசு நமக்கு வேண்டாம். மக்கள் நலனை விரும்பும் அரசையும், அரசியலையும்தான் நாம் விரும்ப வேண்டும்" என்றார்.


[X] Close

[X] Close