தனுஷ்கோடி அருகே 3-ம் மணல் திட்டில் கிடந்த 900 கிலோ பீடி இலை மூடைகள் - போலீஸார் தீவிர விசாரணை | Leaf bundles found on the 3rd sand near Dhanushkodi

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (08/03/2019)

கடைசி தொடர்பு:07:25 (08/03/2019)

தனுஷ்கோடி அருகே 3-ம் மணல் திட்டில் கிடந்த 900 கிலோ பீடி இலை மூடைகள் - போலீஸார் தீவிர விசாரணை

இந்தியக் கடல் பகுதியான மூன்றாம் தீடை (மணல் திட்டு) பகுதியில் கிடந்த 900 கிலோ பீடி இலை மூடைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.

மண்டபம் கடலோரக் காவல் படையினர் கைபற்றிய பீடி இலை மூடைகள்

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதும், இங்கிருந்து இலங்கைக்குக் கஞ்சா, பீடி இலைகள், மருந்துப் பொருள்கள் ஆகியன கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதைத் தடுக்க இந்தியக் கடலோரக் காவல் படையினர் நாள் தோறும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்திலிருந்து ரோந்துக் கப்பல்கள் மற்றும் ஹோவர் கிராஃப்ட் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று பகலில் மண்டபத்திலிருந்து ஹோவர் கிராஃப்ட் கப்பல் H -190 தென்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலாக அமைந்துள்ள 3-ம் எண் மணல் திட்டில்  சில சாக்கு மூடைகள் கிடந்துள்ளன. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற கடலோரக் காவல் படையினர் அவற்றைச் சோதனையிட்டபோது அவற்றில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீடைப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆட்கள் யாரும் சிக்கவில்லை.

இதையடுத்து, தீடையில் கிடந்த 18 மூடைகளில் இருந்த சுமார் 900 கிலோ பீடி இலைகளை மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியிலிருந்து இந்தப் பீடி இலை மூடைகளைக் கடத்தல் ஆசாமிகள் இலங்கைக்குக் கள்ளத்தனமாக எடுத்துச் சென்ற நிலையில், ரோந்து சென்றவர்களிடம் சிக்காமல் இருக்க இவற்றை தீடை பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

இதனிடையே ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரைப் பகுதிக்கு பைபர் படகு மூலம் கள்ளத்தனமாக வந்த இலங்கையைச் சேர்ந்த இருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இலங்கை தலைமன்னார் காட்டு ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்த தியான், யோகராஜா எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அகதிகளை ஏற்றிச் செல்ல வந்தார்களா அல்லது கடத்தலில் ஈடுபட வந்தார்களா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close