``விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும்!” - எம்.எல்.ஏ ரத்தினசபாபதிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் | Madurai High court order in rathina sababathy case

வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (08/03/2019)

கடைசி தொடர்பு:09:06 (08/03/2019)

``விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும்!” - எம்.எல்.ஏ ரத்தினசபாபதிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்

சபாநாயகரை  மிரட்டும் வகையில் பேசியதாக, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி மீது தொடரப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரியிருந்த எம்.எல்.ஏவிற்கு முன் ஜாமீன் கொடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதி மன்ற மதுரை கிளை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், `கடந்த பிப்ரவரி 28 - ம் தேதி நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் சபாநாயகர் மற்றும் கொறடா ஆகியோரை நான் மிரட்டும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தற்போது சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வரும் என்னைக் கைது செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ரத்தினசபாபதி

என் மீது இதுவரையிலும் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை. சபாநாயகரை மிரட்டும் விதமாகப் பேசியதாக என் மீது தொடரப்பட்ட வழக்கில், எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத் தரப்பில், ஆஜரான வக்கீல், ``பொதுக்கூட்டத்தில் சபாநாயகர் மற்றும் கொறடாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதியை விசாரிக்க வேண்டியது அவசியம். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ``புகார் அளித்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்கள் ஒன்று சேரக்கூடும். ஆகவே, கைது செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றவர் விசாரணை அதிகாரி விசாரணைக்காக அழைத்தால் வர வேண்டுமென்ற நிபந்தனையுடன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


[X] Close

[X] Close