`க்ரீஸ் போட்டிக்குப் பின் நம்பிக்கை அதிகரித்தது’ - கிராண்ட்மாஸ்டர் ஈரோடு இனியனின் தந்தை நெகிழ்ச்சி | 16 year old erode school student got grand master title

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (08/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (08/03/2019)

`க்ரீஸ் போட்டிக்குப் பின் நம்பிக்கை அதிகரித்தது’ - கிராண்ட்மாஸ்டர் ஈரோடு இனியனின் தந்தை நெகிழ்ச்சி

கிராண்டமாஸ்டர் இனியன்

சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். அதில் 10 இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் 7 கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றவர்களும் அடங்குவர். இவர்களுடன் போட்டி போட்டு விளையாடிய ஈரோட்டைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இனியன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற பலரையும் வீழ்த்தி 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைத் தட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், புள்ளிப் பட்டியலில் 2,500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டராகவும் தேர்வாகியிருக்கிறார். இனியனின் இந்த வெற்றிக்கு முதல் ஆளாக முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இனியனுடைய வெற்றியைக் கண்டு அவருடைய பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

செஸ்

இதுகுறித்து இனியனின் தந்தை பன்னீர்செல்வன் அவர்களிடம் பேசினோம், ``5 வயசுல இருந்து இனியவன் செஸ் விளையாடி வருகிறார். இனியவனை ஏதாவது ஒரு விளையாட்டுல ஈடுபடுத்தணும்ங்கிறது என்னோட ஆசை. அவருக்கும் செஸ் விளையாட்டு ஒத்து வர, அவரோட 6 வது வயசுலயே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி சில்வர் பதக்கம் பெற்றார். அதன்பிறகு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம், மங்கோலியாவில் நடைபெற்ற ஏசியன் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற வேர்ல்டு யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என உலக அளவிலும் பல்வேறு பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.

செஸ்

2010-ம் ஆண்டு க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற `வேர்ல்டு யூத் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சிறந்த செஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். அந்தப் போட்டியில் 3-வது இடத்திற்கு 3 பேர் தேர்வாகினர். அதில் இனியனும் ஒருவர். அந்தப் போட்டியில் வெண்கலம் வென்றார். உலக அளவிலான வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு வந்த அந்தப் போட்டிக்குப்  பிறகு இனியன் மீது எங்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரித்தது. இனியனின் இந்த 10 வருடப் பயணக் காலகட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அவர் வெற்றியைப் பெற்றிருக்கிறார். அதன்வரிசையாக சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதோடு, புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டராகவும் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழர்கள் இன்னும் இதுபோன்ற நிறைய வெற்றித் தடங்களைப் பதிக்க வேண்டும்!...   

  


[X] Close

[X] Close