சொதப்பும் டி.டி.வி தினகரன்... அ.தி.மு.க-வுக்குத் தாவும் நிர்வாகிகள்...! | Coimbatore ammk cadres shifting to admk

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:29 (16/03/2019)

சொதப்பும் டி.டி.வி தினகரன்... அ.தி.மு.க-வுக்குத் தாவும் நிர்வாகிகள்...!

கோவையைப் பொறுத்தவரை இது கடந்த சில தேர்தல்களாகவே அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் படு வீக்காக இருப்பதால், அ.தி.மு.க மிகுந்த நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் களமிறங்குகிறது.

சொதப்பும் டி.டி.வி தினகரன்... அ.தி.மு.க-வுக்குத் தாவும் நிர்வாகிகள்...!

`திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே வைக்க மாட்டோம்' என்று சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பல காலங்களில் கடுமையாக விமர்சித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். இப்படித் தினசரி பல்வேறு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது தமிழக அரசியல் களம். இந்த நிலையில், எந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று சொல்லி வெளியில் வந்தவர்களோ, தற்போது அதே அ.தி.மு.க-வுக்குப் படையெடுத்து வருகின்றனர் கோவை அ.ம.மு.க-வினர்.

அ தி மு க வில் நிர்வாகிகள் இணைவது பற்றி டி.டி.வி தினகரன்

கோவையைப் பொறுத்தவரை, இது கடந்த சில தேர்தல்களாகவே அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அ.தி.மு.க மிகுந்த நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் களமிறங்குகிறது. `எதிர்க்கட்சிகள் வீக்காக இருக்கும்வரைதான் நாம் வலுவாக இருக்க முடியும்' என்று சரியாக கணக்குப் போட்டு அரசியல் செய்து வரும் அ.தி.மு.க, தற்போது டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க-வைக் குறிவைத்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் தாமோதரன், அண்ணா தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளர் சின்னசாமி, மடத்துக்குளம் சண்முகவேலு, முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் சின்னதுரை என்று பல முன்னாள் நிர்வாகிகளை நம்பித்தான், அ.ம.மு.க இருந்தது. ஆனால், தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார் தாமோதரன்.

தாமோதரன்

இதுகுறித்து அ.ம.மு.க-வில் இருந்து விலகி மீண்டும் அ.,தி.மு.க-வில் இணைந்துள்ள சிலரிடம் பேசினோம். ``இங்கிருப்பவர்களை தினகரன் கண்டுகொள்வதேயில்லை. சேலஞ்சர் துரைதான் கோவை அ.ம.மு.க-வுக்கு எல்லாமே. ஆனால், அவரால் அனைவரையும் அரவணைத்துப் போக முடியவில்லை. தனக்குச் சரியான மதிப்பு கிடைக்கவில்லை என்றுதான் தாமோதரன், அ.தி.மு.க-விலிருந்து விலகி அ.ம.மு.க-வுக்கு வந்தார். அ.ம.மு.க-வில் அவருக்கு மாவட்டச் செயலாளர் போஸ்டிங் கூடக் கொடுக்கப்படவில்லை.

இவர்களுக்காக, உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முறைத்துக்கொண்டு, 50 பேர் சிறைத் தண்டனை எல்லாம் அனுபவித்தோம். கிட்டத்தட்ட ஒருமாதம் வருமானத்தை இழந்து, குடும்பத்தை எல்லாம் விட்டு பிரிந்திருந்தோம். கடைசியாக, `அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயாவது வழங்குங்கள்' என்று கேட்டோம். `செய்றோம், செய்றோம்' என்று சொன்னார்களே தவிர, ஒன்றும் செய்யவில்லை.

தேர்தல் நெருங்கிவிட்டது. சின்னம்மா சொன்னபடி, கோவையில் சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி-யாக இருக்கும் நாகராஜனுக்கே மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால், சேலஞ்சர் துரை தன் மகன் செந்தில்குமாரை வேட்பாளராக நிறுத்துவதற்கு காய் நகர்த்தி வருகிறார். பொள்ளாச்சியிலும் இதே நிலைதான். இருப்பதே வெகுசிலர். அதற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அ.தி.மு.க - அ.ம.மு.க மோதலின் போது

தேர்தலுக்குச் செலவு செய்யவும் ஆள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தனியாக நிற்பதெல்லாம் மேலும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். இனியும், ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால்தான் மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்துவிட்டோம்" என்றனர்.

அ.ம.மு.க-வில் இருந்து அ.தி.மு.க.-வுக்கு வருபவர்களுக்குச் சிறந்த கவனிப்பு என்று அ.தி.மு.க தரப்பில் உறுதியளிக்கப்படுகிறதாம். இதனால், அ.ம.மு.க நிர்வாகிகள் பலரும் மீண்டும் தாய்க் கழகமான அ.தி.மு.க.-வுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதனால், அ.தி.மு.க கூட்டணியில் உற்சாகம் அதிகரித்துக் காணப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close