``அம்மா ஆவி சும்மா விடாது!- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்ஸை விமர்சிக்கும் `முரசொலி' | murasoli curse ops and eps for alliance with bjp

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:30 (08/03/2019)

``அம்மா ஆவி சும்மா விடாது!- ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்ஸை விமர்சிக்கும் `முரசொலி'

ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டத்தை ஜெயலலிதா ஆவி சும்மா விடாது என்று தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது. இன்று வெளிவந்துள்ள முரசொலி பத்திரிகையில், ``அம்மா ஆவி சும்மா விடாது!'' என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. முரசொலி

``இட்லிக்கு ஆவி உண்டே தவிர, இறந்தவர் ஆவி என்பதெல்லாம் இல்லை என்பதே நமது பகுத்தறிவு. ஆனால், பாவி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் ஆவியும் உண்டு, பேயும் உண்டு. ஏனென்றால், காவியின் தயவில் காலம் தள்ளுபவர்கள்.'' எனத் தொடங்கும் தலையங்கம், பா.ஜ.க. மீது கடந்த காலங்களில் ஜெயலலிதா முன்வைத்த விமர்சனங்களைப் பட்டியலிட்டு, ஜெயலலிதாவே புறந்தள்ளிய கூட்டணியை, இயற்கைக் கூட்டணி என்று அழைக்க எப்படி வாய் வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

``பாடம் பண்ணப்பட்ட ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் கண்மூடி அமர்ந்து `ஆவி'யோடு பேசி, சின்னம்மாவின் இதயத்தில் கத்தியை சொருகியவர் ஓ.பி.எஸ்.! மீண்டும் துணை முதல்வர் பதவியும், 250 'பெருசு'ம் கிடைத்த பிறகு அம்மாவின் `ஆவி'யோடு பேசுவதில்லை. அவர் ஜெயலலிதாவின் ஆன்மாவை மறந்துவிட்டார் என்பது மட்டுமல்ல, `ஆவி'க்கு துரோகம் செய்யவும் துணிந்துவிட்டார். இந்தத் துரோகத்துக்கு கோட்டை அறையில் நித்தமும் யாகம் செய்தாலும் கோபம் தணிக்க முடியாது'' என்று ஓ.பி.எஸ்.-ஐ சாடியுள்ளது `முரசொலி'. இதில் சசிகலாவை `சின்னம்மா' என அழைத்திருப்பது தான் ஹைலைட்!

`` `எங்களை எப்படியாவது கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறோம்' என்று பேச வந்த நரேந்திர மோடியிடம், அந்தப் பேச்சையே எடுக்கவிடாமல் ஒருவேளைச் சோறு போட்டு ஜெயலலிதா திருப்பி அனுப்பியதைப் பழனி - பன்னீர் மறந்துவிட்டார்களா,  குஜராத் வளர்ச்சியின் உண்மை முகத்தை 2014-ம் ஆண்டே புட்டுப்புட்டு வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். குஜராத் மோடியா - தமிழ்நாடு லேடியா எனக் கேள்வி கேட்டபோது பஞ்சடைக்கப்பட்ட பழனி - பன்னீர் காதுகளுக்குப் போகவில்லையா?" என்றெல்லாம் கொதித்துள்ளது 'முரசொலி'.

``இந்திய குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் அனைத்து குற்றங்களையும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்து வரும் பழனி - பன்னீர் கூட்டம் இறுதியாக ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை துரோகத்தையும் செய்து தனது அரசியல் அத்தியாயத்துக்குத் தானே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளத் தயாராகிவிட்டது. காவியோடு சேர்ந்த பாவிகளை ஆவி மன்னிக்கலாம். தமிழ் பூமி மன்னிக்காது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முரசொலியின் இந்த தலையங்கம், ஜெயலலிதா மீது அனுதாபம் உடையவர்களை வளைக்கும் வித்தையா அல்லது பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைந்துவிட்ட வயிற்றெரிச்சலா என்கிற விவாதம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. எது எப்படியோ, ஜெயலலிதாவின் ஆவிக் கதையை வைத்து அ.தி.மு.க.வுக்குள் குட்டையைக் குழப்பியுள்ளது முரசொலி. `நமது அம்மா' என்ன பதிலடி கொடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


[X] Close

[X] Close