துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சி; தே.மு.தி.க-தி.மு.க நிர்வாகிகள் மோதலால் பதற்றம் | DMDK executives went to Duraimurugan house for protest

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:55 (16/03/2019)

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சி; தே.மு.தி.க-தி.மு.க நிர்வாகிகள் மோதலால் பதற்றம்

பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க நிர்வாகிகள் கூறியதை வெளியிட்டு விமர்சனம் செய்த துரைமுருகனைக் கண்டித்து, காட்பாடியில் தே.மு.தி.க-வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க-வினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட சென்ற தே.மு.தி.க நிர்வாகிகள்

அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவரும் தே.மு.தி.க, ரகசியமாக தி.மு.க-வுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக துரைமுருகன் விமர்சனம் செய்து வெளியிட்ட தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு, தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ் மறுப்பு தெரிவித்தார். ``சொந்த விஷயமாகவே தி.மு.க பொருளாளர் துரைமுருகனை, தே.மு.தி.க நிர்வாகிகள் சந்தித்தார்கள். துரைமுருகன் பேசியதைச் சொன்னால் அசிங்கமாகிவிடும்’’ என்று சுதீஷ் கொந்தளித்தார்.

இந்த நிலையில், துரைமுருகனைக் கண்டித்து வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சீலியம் கல்லூரி அருகே மத்திய மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் தே.மு.தி.க-வினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள துரைமுருகனின் வீட்டை முற்றுகையிடுவதற்காகச் சென்றனர். போலீஸார் தடுத்ததால், தே.மு.தி.க-வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட சென்ற தே.மு.தி.க நிர்வாகிகள்

இதுபற்றி தகவலறிந்த தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இருக் கட்சியினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தே.மு.தி.க-வினர், துரைமுருகனை வசைபாடி கோஷம் எழுப்பியதால், தி.மு.க-வினர் கோபமடைந்தனர். இதனால், இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய பதற்றமான சூழல் தொற்றிக்கொண்டது. உடனடியாக, தே.மு.தி.க-வினரை போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து, தி.மு.க-வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


[X] Close

[X] Close