வேலூர் சிறையில் பெண் கைதிக்கு மனநலம் பாதிப்பு! -மற்றொருவருக்கு நெஞ்சுவலி | Mental suffer for the female prisoner in Vellore jail

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (08/03/2019)

கடைசி தொடர்பு:13:05 (08/03/2019)

வேலூர் சிறையில் பெண் கைதிக்கு மனநலம் பாதிப்பு! -மற்றொருவருக்கு நெஞ்சுவலி

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு பெண் கைதி நெஞ்சுவலியால் துடித்ததால், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் சிறை

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). 2016-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மனநல பாதிப்பு தீவிரமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கைதி ராஜம்மாள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவேணி (57). சாராய வியாபாரியான இவரை, கடந்த 3-ம் தேதி அம்பலூர் போலீஸார் கைதுசெய்தனர். நீதிமன்ற காவலில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்சவேணிக்கு, நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை, சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதி அம்சவேணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


[X] Close

[X] Close