அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்..' -விஜயகாந்த்துக்கு ரெட் அலர்ட் விடுத்த மா.செ  | DMDK parliament alliance news

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:11:55 (16/03/2019)

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்..' -விஜயகாந்த்துக்கு ரெட் அலர்ட் விடுத்த மா.செ 

கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என விஜயகாந்த்துக்கு சில மாவட்டங்களிலிருந்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி தே.மு.தி.க. ஏன் இன்னமும் கூட்டணியில் இணையவில்லை என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், தே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவோர்கள் பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் மோடி கூறியதாக ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். அதில் கூட்டணியில் சேருவது குறித்து உடனடியாக முடிவெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் கோயம்பேடு கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேர்தல் பங்கீட்டுக் குழுவினர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்த வண்ணம் உள்ளன. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிக்கடி மாறுதலுக்குட்படுத்தப்பட்டுவருகின்றன. இதனால்தான் உறுதியான முடிவை எடுக்க முடியாத சூழல் தே.மு.தி.கவுக்கு ஏற்பட்டுள்ளது. 

 ஓ.பன்னீர்செல்வத்துடன் விஜயகாந்த்

ஏற்கெனவே கூட்டணி விஷயத்தில் தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனால் தே.மு.தி.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி அமைக்க தே.மு.தி.க.வுக்கு சாய்ஸ் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தே.மு.தி.க-வின் துணைச் செயலாளர் சுதீஷ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறியுள்ளார். 

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. எந்தளவுக்கு கெத்து காட்டியதோ அதே கெத்துவை அ.தி.மு.க. தற்போது காட்டத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திமோடியின் நிகழ்ச்சிக்குப்பிறகு சென்னையிலிருந்து தேனி சென்றுவிட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர் கட்சி அலுவலகப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் கூட்டணி ஒப்பந்தத்துக்காக தே.மு.தி.க-வினர் காத்திருக்கின்றனர். 

 விஜயகாந்த்

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகிவிட்டது. வரும் 10-ம் தேதி கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். முதலில் 5 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாகக் கூறினார்கள். நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்தது. அதோடு பிரதமர் மோடி சென்னை வந்தபோது நடந்த களேபரத்தால் 4 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக அ.தி.மு.க. தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது. அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``தே.மு.தி.க. செய்த காலதாமதத்தால் எங்கள் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. எங்களின் மெகா கூட்டணியை சீர்குலைக்க தி.மு.க. சதித்திட்டம் போட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தவுடன் என்னென்ன தொகுதி என்பது அறிவிக்கப்படும். தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க சம்மதித்துள்ளோம். ஆனால், தே.மு.தி.க. தரப்பில் முதலில் 7 சீட் கேட்டார்கள். பிரதமர் மோடி கூட்டத்தில் விஜயகாந்த்தை அமர வைக்க வேண்டும் என்ற அவசரத்தில் 6 சீட்டுக்கு சம்மதித்தோம். ஆனால், கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 3 தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட் ஆகியவை கொடுக்கப்படும். அதற்கு தே.மு.தி.க. தலைமை சம்மதித்தால் உடனடியாக ஒப்பந்தம் போடப்படும்" என்றார். 

இந்த நிலையில், தே.மு.தி.க-வின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்துக்கு தென்மாவட்டங்களிலிருந்தும் வடமாவட்டங்களிலிருந்தும் முக்கிய மெசேஜ் வந்துள்ளது. அதில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம் என்று கூறப்பட்டுள்ளது. அதுதொடர்பாகவும் விஜயகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளார். ஆனால், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அ.தி.மு.க. கூட்டணி என்று முடிவெடுத்துவிட்டார்கள். இதனால் அ.தி.மு.க. கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திடுவார் என்று சொல்கின்றனர் தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள்.  


[X] Close

[X] Close