`ஒரு பெண் இருந்தால், 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வார்கள்!'- கூட்டணி குறித்து பிரேமலதா | premalatha vijayakanth interview about alliance

வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:02 (16/03/2019)

`ஒரு பெண் இருந்தால், 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வார்கள்!'- கூட்டணி குறித்து பிரேமலதா

அ.தி.மு.க- தே.மு.தி.க-தி.மு.க ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசும்போது, ‘ஒரு பெண் இருந்தால், 10 பேர் பெண் கேட்கத்தான் செய்வார்கள். இது மிகவும் சகஜமான விஷயம். கட்சி என்று இருந்தால் கூட்டணி கேட்டு பலர் வரத்தான் செய்வார்கள். 2005-ம் ஆண்டே எங்கள் கொள்கை அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு துளிகூட தே.மு.தி.க விலகியது கிடையாது. தமிழகத்திலேயே முதல்முதலாக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து புதிய முறையை உருவாக்கியது தே.மு.தி.க-தான். 2006-ம் ஆண்டு தனித்துப் போட்டி, 2009-ல் தனித்துப் போட்டி. பிறகு 2011-ம் ஆண்டுதான் அ.தி.மு.க-வுடன் முதல் கூட்டணி வைக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அனைத்து இடைத்தேர்தல்களையும் நாங்கள் தனியாகத்தான் சந்தித்தோம். தற்போது வரவுள்ளது நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் பிரதமரைத் தீர்மானிக்கவுள்ள தேர்தல். இதில் இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்றுடன்தான் நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும். சென்ற தேர்தலில் அ.தி.மு.க தனியாக நின்று 37 இடங்களை வென்றது. ஆனால், அதனால் தமிழகத்துக்கு என்ன நல்லது நடந்தது. 

பிரதமர் வேட்பாளர் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே எங்களால் தமிழகத்துக்கு நல்ல விஷயங்களைக் கேட்டுப் பெற முடியும். கேப்டனை பொறுத்தவரை, இரண்டு தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளார். இன்னும் நாங்கள் கூட்டணி அறிவிக்கவில்லை, யாருக்கு எந்தத் தொகுதி என்பது முடிவாகவில்லை. இவை முடிந்த பிறகு தே.மு.தி.க கூட்டணி குறித்துத் தெளிவாக நாங்கள் பதிய வைப்போம். 

ஒரு கட்சி என்றால் அவர்கள் சில வார்த்தைகளைக் கூறும்போது நாங்களும் சில வார்த்தைகளைச் சொல்லவேண்டிய நிலைதான் இருக்கும். இதனால் அந்தக் கட்சிகளுடன் சேரக் கூடாது என்பது எல்லாம் கிடையாது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னதாக ஜெயலலிதா, விஜயகாந்த் மீது பல அபாண்டமான வார்த்தைகளைக் கூறினார். ஆனால், அதன் பின்னர் கூட்டணி அமைக்கவில்லையா, ஜெயலலிதா வெற்றி பெறவில்லையா. இன்றுவரை அ.தி.மு.க ஆட்சியில் உள்ளது என்றால் அதற்கு தே.மு.தி.க-தான் காரணம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தெளிவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெறும் இரண்டு நாள்கள் பொறுத்திருந்தால் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம். ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையிலேயே குரல் கொடுத்தவர் விஜயகாந்த் என்பது இந்த உலகத்துக்கே தெரியும்’ கிழியாத சட்டையை கிழித்துப் போட்டோ எடுத்து இந்த உலகத்துக்குத் தெரியப்படுத்தும் கட்சி கிடையாது தே.மு.தி.க. அதனால் எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இதில் தப்பு நடந்தால் அது யாராக இருந்தால் நாங்கள் கேட்போம். நல்லது நடந்தால் பாராட்டுவோம்.

யார் ஆட்சி தொடர்ந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்கவில்லையென்றால் தே.மு.தி.க முதல் ஆளாகத் தட்டிக் கேட்கும். கேப்டன் எந்தக் கூட்டணிக்குச் சென்றாலும் அவர்கள் இதுவரை மக்களுக்குச் செய்யாத நல்ல திட்டங்களை மக்களுக்காகச் செய்ய வைப்பார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. கூட்டணி முடிவான பிறகு, அனைவருக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் தேதிகள் வெளியான பிறகு கேப்டனின் பிரசாரம் பற்றி நாங்கள் அறிவிப்போம். உங்களின் அவசரத்துக்காக நாங்கள் கூட்டணி அறிவிக்க முடியாது. எத்தனை இடங்கள், எந்தத் தொகுதி போன்ற அனைத்து விஷயங்களிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம். இன்னும் இரண்டு நாளில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும். நாங்கள் முன்னதாக பா.ஜ.க கூட்டணியிலிருந்தபோது அனைத்துக் கட்சிகளை ஒன்றாக அழைத்து ஒரே மேடையில் கையெழுத்திட்டு ஒரே நாளில் அனைத்துக் கட்சி கூட்டணிகளையும் அறிவித்தார்கள். இந்த முறையும் அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக பா.ம.க கூட்டணி முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் எங்கள் கூட்டணி அறிவிப்பதில் இவ்வளவு தாமதம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுத்திருந்தால் எங்கள் கூட்டணி எப்போதோ தீர்மானமாகியிருக்கும். இதுதான் எங்களின் நிலைப்பாடு.

கூட்டணி தொடர்பாக எங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்போது எங்களுக்கு எத்தனை எம்.பி சீட், எந்தத் தொகுதி போன்ற அனைத்து அறிவிப்புகளும் வரும். தனித்தனியாகக் கட்சிகளை அழைத்து கூட்டணிகளை அறிவித்ததினால்தான் நாங்கள் மன வருத்தத்திலிருந்தோம். அந்த காலகட்டத்தில்தான் தி.மு.க எங்களுடன் தொடர்புகொண்டது. இன்னும் இரண்டு நாளில் நிச்சயமாக எங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்'' என்று கூறினார்.


[X] Close

[X] Close