`யாராவது நல்லது செய்யமாட்டார்களா என நானும் காத்திருந்தேன்!’- மகளிர் தின விழாவில் கமல் பேச்சு | kamal speech about Tn politics

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (08/03/2019)

கடைசி தொடர்பு:16:14 (08/03/2019)

`யாராவது நல்லது செய்யமாட்டார்களா என நானும் காத்திருந்தேன்!’- மகளிர் தின விழாவில் கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நகைச்சுவை நடிகை கோவை சரளா, கோவை மருத்துவர்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

இந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘ தமிழகத்தில் நல்ல திறமையான பல பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் உதாசினப்படுத்தப்படுவதுதான் பெரும் கொடுமை. கலை போன்ற மற்ற துறைகளைத் தாண்டி அரசுப் பணிகளுக்கு அதிகம் பெண்கள் வரவேண்டும். இவற்றை உங்களால் மாற்ற முடியும். இதற்கு நீங்கள் எங்கு யாரைக் கொண்டு வைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இதுவரை வைத்தது நீங்கள். இனிமேல் வைக்கப் போவதும் நீங்கள்தான். உங்கள் பலம் உங்களுக்கே தெரியாது. ஒரு வீட்டில் பெண்கள் முடிவெடுத்தால் ஐம்பது சதவிகிதம் வெற்றிதான். எனவே, நீங்கள் நல்ல முடிவை எடுங்கள். 

எனக்கு வசதியாக என் கைக்கு அடக்கமான ஆளை அந்தந்த துறைகளில் நியமிக்கும் அரசியல் முடிந்துபோய்விட்டது. அதை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டமாக நாம் இருக்க வேண்டும். எனக்குப் பிறகு எனது மகளோ, மைத்துனரோ பதவிக்கு வருவார்கள் என்பதும் இருக்கக் கூடாது. அதனால்தான் எங்களைக் கிண்டலடிக்க கிண்டலடிக்க அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் வெளியில் இருந்து திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். இது நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்ற பிறகு, நாங்கள் யோசித்தோம். அதைச் செய்வதற்குள் இவர் செய்துவிட்டார் அல்லது நாங்கள் ஏற்கெனவே செய்ததைத்தான் தற்போது இவர் செய்கிறார் என கூறப்போகிறார்கள். 

நல்லது முன்னரே உலகில் உள்ளது அதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். யாராவது நல்லது செய்ய வரமாட்டார்களா எனக் கேட்டார்கள். யாரும் வரமாட்டார்கள். நாம்தான் வரவேண்டும். யாராவது வரமாட்டார்களா என முப்பது வருடங்களாகக் காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். புரட்சி நம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் தொண்டர்களைப் பார்த்துப் பேசுபவர்கள் கிடையாது. தலைவர்களைப் பார்த்துப் பேசுபவர்கள். அதனால் நான் தலைவர்கள் உள்ள கூட்டத்தில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மேடை சிறியது மனம் பெரியது. உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தான் மேடை சற்று பெரிதாக உள்ளதே தவிர மற்றபடி இங்கு அனைவரும் சரிசமம் தான்’ எனப் பேசியுள்ளார். 


[X] Close

[X] Close