அபிநந்தனுக்கு `பரம்வீர் சக்ரா விருது!’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை | Param vir chakra for Abhinandan, CM EPS urges PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (08/03/2019)

கடைசி தொடர்பு:16:14 (08/03/2019)

அபிநந்தனுக்கு `பரம்வீர் சக்ரா விருது!’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். 

அபிநந்தன்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதத் தளத்தின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லை அருகே அமைந்திருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அதற்கு இந்திய விமானப்படை தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது இந்திய விமானப்படை, மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இழந்தது. அந்த விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் தரையிறங்கவே, அந்நாட்டு ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர், அமைதி நடவடிக்கைக்காக என்று கூறி வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கடந்த 1-ம் தேதி ஒப்படைத்தது. 

மோடி - எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையிலும் தீரத்துடன் செயல்பட்ட விமானி அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் தீரமாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட்ட விமானி அபிநந்தனின் செயல் நாட்டு மக்களின் இதயங்களை வென்றெடுத்தது. அவரது செயல்பாடுகளைப் பாராட்டி நாட்டின் உயரிய ராணுவ விருதான `பரம்வீர் சக்ரா’ விருதுகொடுத்து கௌரவிப்பதே பொருத்தமாக இருக்கும். எனவே, அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


[X] Close

[X] Close