2018-ல் நீக்கப்பட்டார்; 2019-ல் சேர்க்கப்பட்டார்! - அ.தி.மு.க-வில் மீண்டும் ஐக்கியமான கே.சி.பழனிசாமி | K.C Palanisamy joined aiadmk

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/03/2019)

2018-ல் நீக்கப்பட்டார்; 2019-ல் சேர்க்கப்பட்டார்! - அ.தி.மு.க-வில் மீண்டும் ஐக்கியமான கே.சி.பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார் எனக் கடந்த 2018-ம் ஆண்டு நீக்கப்பட்டார் கே.சி.பழனிசாமி. அவர் மீண்டும் இன்று அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

கே.சி.பழனிசாமி


ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி காலியானது. பின் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சிப் பதவியுடன், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற நினைத்தார் சசிகலா. அவரின் முதல்வர் கனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை சென்றார் அவர். சிறைக்குச் செல்லும் முன், எடப்பாடியை முதல்வராகவும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்தார். எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் ஏற்பட கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் தினகரன். கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு, விதிமுறைகள் திருத்தப்பட்டன.

இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. மாறாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே அவர் 2018-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவித்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து, கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டார். 
 


[X] Close

[X] Close