`எங்களுக்குத்தான் முதல்ல முடிவெட்டணும்!’ - சேவிங் கத்தியால் சலூன்காரரை வெட்டிய குடிமன்னர்கள் | saloon Shop problem 2 Arrested in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:19:23 (08/03/2019)

`எங்களுக்குத்தான் முதல்ல முடிவெட்டணும்!’ - சேவிங் கத்தியால் சலூன்காரரை வெட்டிய குடிமன்னர்கள்

சலூன் கடைக்காரர்கள் புகார்

ஊட்டி நகரில் மணிக்கூண்டுப் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் ரகு (35). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் ரகுவின் கடைக்கு இரண்டு வாலிபர்கள் முடிெவட்டுவதற்காக வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது ரகு, ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டிருந்துள்ளார். கடைக்குள் சென்ற இருவரும் தங்களுக்கு முடிவெட்டி விடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு ரகு, ஏற்கெனவே நான்கு பேர் உள்ளனர். அவர்களுக்குப் பின் உங்களுக்கு முடிவெட்டுகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்காத அவர்கள் இருவரும் தங்களுக்கு முதலில் முடி வெட்டுமாறு ரகுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சலூன் கடை

வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த சேவிங் செய்யும் கத்தியை எடுத்து ரகுவின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர். இதில், ரகுவுக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காயமடைந்த ரகு ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், ரகுவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காந்தல் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (35) மற்றும் ராம்ஜூ (30) ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே சலூன் கடைக்காரர் தாக்கப்பட்டதுக்குக் கண்டனம் தெரிவித்து, ஊட்டி நகரில் இயங்கி வந்த சலூன் கடைகள் மூடப்பட்டிருந்தன.


[X] Close

[X] Close