`புரிதல் இல்லையின்னா பேசாதீங்க!'- ஸ்டாலினை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன் | Pon.Radhakrishnan Slams DMK Leader MKStalin

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/03/2019)

கடைசி தொடர்பு:12:03 (16/03/2019)

`புரிதல் இல்லையின்னா பேசாதீங்க!'- ஸ்டாலினை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்

``ரஃபேல் ஆவணங்கள் திருடுபோன குற்றச்சாட்டு குறித்து சிலர் மத்திய அரசை குறைகூறிவருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க சிலருக்கு பித்தம் தலைக்கேறும்'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை வாரம் மூன்று நாள்கள் இயக்கப்படும் ரயிலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென்மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் வரும் ரயில்களின் தேவை அதிகமாக உள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இன்று பாதி இணைக்கப்படுகிறது, மீதி வரும் 15-ம் தேதி இணைக்கப்படும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு பொதுக்கூட்டத்தில் இரட்டை ரயில்பாதை திட்டம் நடைமுறைபடுத்தவில்லை என்ற தவறான தகவலை கூறியுள்ளார். தவறுதலாக அவர் கூறிவிட்டார் என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஸ்டாலின் பொய் கூறினார் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புரிதல் இல்லையென்றால் அதுகுறித்து பேசக்கூடாது. எனவே ஸ்டாலின் கூறிய கருத்தை அவர்  திரும்ப பெறவேண்டும். 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில்பாதை திட்டம் நடந்துவருகிறது. அதிலும் பாதி தொகை மாநில அரசு தரவேண்டும். மாநில அரசிடம் பணம் இல்லாததால் முழுதொகையும் மத்திய அரசே செலுத்தியது. தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரும். நாங்கள் சொந்த பலத்திலேயே ஜெயிப்போம். ஆனால், நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேரவேண்டும். தனிப்பட்டமுறையில் நம்பி கூறும் வார்த்தையை வெளியில் கூறுவது அரசியல் அநாகரிகம். பலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பல கருத்துக்களை பேசியுள்ளார்கள். பிறகு ஒருகட்டத்தில் என்னை அவர்கள் தவறாக பேசியுள்ளார்கள். அதற்காக அவர்கள் தனிப்பட்டை முறையில் என்னிடம் நம்பி சொல்லிய வார்த்தையை வெளியில் கூறினால் அது அரசியல் அநாகரிகம்.

ரயில்

எனவே சிலர் அரசியலில் அடிப்படை நாகரிகம் தெரிந்துகொள்ள வேண்டும். ரஃபேல் ஆவணங்கள் திருடுபோன குற்றச்சாட்டு குறித்து சிலர் மத்திய அரசை குறைகூறிவருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க சிலருக்கு பித்தம் தலைக்கேறும். கன்னியாகுமரி மாவட்ட பிரஜை என்ற முறையில் குமரி மாவட்டம் வருகை ராகுல் காந்தியை வரவேற்கிறேன்" என்றார்.


[X] Close

[X] Close