ஊட்டியில் மகளிர் தினக் கொண்டாட்டம் - தூய்மைப் பணியாளர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த ஆட்சியர் | Ooty Womens day celebration

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (08/03/2019)

கடைசி தொடர்பு:21:15 (08/03/2019)

ஊட்டியில் மகளிர் தினக் கொண்டாட்டம் - தூய்மைப் பணியாளர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த ஆட்சியர்

மகளிர் தின விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொண்டாடப்பட்டது. விழாவில், மாவட்டக் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி சண்முகப்பிரியா, எம்.பி அர்ச்சுனன், எம்.எல்.ஏ சாந்தி ராமு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் ஆகியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கமாக கேக் வெட்டப்பட்டது. முன் வரிசையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இடமளிக்கப்பட்டு ஆட்சியர், அதிகாரிகள் முதலில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

கலை நிகழ்ச்சிகள்


தொடர்ந்து, ஆஷா பணியாளர்கள் சார்பில் (மகளிர் திட்டம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பர்ய உணவுத் திருவிழாவை கலெக்டர் தொடங்கி வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பழங்குடியின மக்கள் ஆகியோரின் பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. தோடர் பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இனமக்களின் பாரம்பர்ய நடன நிகழ்ச்சியின்போது, மாவட்டக் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எம்.பி அர்ச்சுனன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து நடனமாடினர்.

மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா

இதைக் கண்ட அங்கு கூடியிருந்த அனைத்துப் பெண்களும் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து, மகளிர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டு ரசித்தனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக மகளிர் தின விழா

மகளிர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பணியாற்றும் பெண்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், தாவரவியல் பூங்கா பெண்கள்கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

 

 


[X] Close

[X] Close