`தபால் கணக்குத் தொடங்கினால், பிரதமர் பணம் போடுகிறார்!’ - வதந்தியால் ஏமாந்த பொதுமக்கள் | If the Postal Account starts, the Prime Minister makes money spreading rumours

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (08/03/2019)

`தபால் கணக்குத் தொடங்கினால், பிரதமர் பணம் போடுகிறார்!’ - வதந்தியால் ஏமாந்த பொதுமக்கள்

பொதுமக்கள் தபால் நிலையங்களில், தபால் சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் போதும், அதில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.20,000 வரையிலும் பணம் செலுத்துவதாக வதந்தி பரவியது. இதை நம்பி, புதுக்கோட்டையில் உள்ள தபால் நிலையங்களில் அலைந்து திரிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தபால்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கினால், வங்கிக் கணக்கில், பிரதமர்  நரேந்திர மோடி ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும் பணம் செலுத்துகிறார் என வதந்தி பரப்பப்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் சேமிப்புக் கணக்குத் தொடங்குவதற்காகப் புதுக்கோட்டை தலைமைத் தபால் அலுவலகம் உள்ளிட்ட தபால் நிலையங்களில் குவிந்தனர். ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களுடன், காலை முதலே நீண்ட வரிசையில் தபால் நிலையங்களில் காத்திருந்தனர். வதந்தி என்று தெரிந்தவுடன் ஒரு சிலர் அங்கிருந்து புலம்பிக்கொண்டே வீடு திரும்பினர். வதந்தி எனத் தெரிந்தும், பலர் காத்திருந்து தபால் கணக்குத் தொடங்கிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். 

இதுகுறித்து பொதுமக்களிடம் பேசினோம், `என்ன ஏதுன்னு எல்லாம் தெரியாது. ஜீரோ பேலன்ஸ்ல தபால் கணக்குத் திறந்தா பணம் கிடைக்கும்னு சொன்னார்கள். அதனால்தான் வந்தோம். நிவாரணம் கொடுக்கிறார்களா, இல்லை தேர்தல் வருகிறதால் பணம் போடுவாங்களான்னு தெரியலை. ஆனா, தபால் கணக்குத் திறந்தால், மோடி பணம் போடுவார் என்று மட்டும் சொன்னார்கள்.

மக்கள்

இங்கு தபால் ஆபீஸ்ல கேட்டால் அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே, கஜா புயல் பாதிக்கப்பட்டு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவிக் கிடைக்காதா என்று ஆசையோடு வந்தோம்’’ என்றனர்.

தபால் துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தபால் சேமிப்புக் கணக்குத் தொடங்கினால், பணம் போடப்படுவதாக, மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து, மக்களிடம் கூறினோம். ஆனாலும், தபால் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது தங்களுக்குப் பயனளிக்கும் என்று கூறினோம். இதுபோன்று வதந்தி பரப்புபவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றனர். 


[X] Close

[X] Close