``தமாகா முன்வந்தால், கட்சித் தலைமை பரிசீலனை செய்யும்!" - திருநாவுக்கரசர் | If TMC comes forward to join Congress, the party leadership will consider, says Tirunavukkarar

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:11 (16/03/2019)

``தமாகா முன்வந்தால், கட்சித் தலைமை பரிசீலனை செய்யும்!" - திருநாவுக்கரசர்

``தமாகா கட்சி காங்கிரஸில் மீண்டும் இணைவது குறித்து ஜி.கே.வாசன் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸுடன்  இணைந்து பணியாற்ற விரும்பினால், அதனைக் கட்சி தலைமை பரிசீலித்து முடிவு செய்யும்" எனத் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் தெரிவித்தார்.

 திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னால் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம், "வரும் 13 -ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும்  ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்படக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அனுமதி அளித்தால் போட்டியிடுவேன்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தினால் அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் செலவு குறையும். அப்படி நடத்தப்படும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு 10 இடங்களுக்கு மேல் கிடைத்தால் ஆட்சி நீடிக்கும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் தேர்தல் இல்லாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தலில் ஜி.கே.வாசனின் தமாகா கட்சி காங்கிரஸில் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினால், அதனைக் கட்சி தலைமை முடிவு செய்யும். தேர்தல் விதிமுறைகளைத் தெளிவாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ரஃபேல் போர் விமான பிரச்னையில் நாட்டில் காவலாளியே திருடனாக இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசு பாதுகாப்பில் உள்ள கோப்புகள் எப்படிக் காணாமல் போகும். அரசுக் கோப்புகளைக் கூட காப்பாற்ற முடியாத அரசு, இந்தியாவை எப்படிக் காப்பாற்ற முடியும்"  என்று பேசினார்.

 


[X] Close

[X] Close