களமிறங்கும் கமீலா நாசர்.. -நட்சத்திர தொகுதியாகும் மத்திய சென்னை! | kamalhasan fields kameela naseer in central chennai constituency

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:11 (16/03/2019)

களமிறங்கும் கமீலா நாசர்.. -நட்சத்திர தொகுதியாகும் மத்திய சென்னை!

நட்சத்திர தொகுதி அந்தஸ்தை மத்திய சென்னை இப்போதே பெற்றுவிட்டது. தி.மு.க.வில் தயாநிதி மாறன், அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி எனத் பெருந்தலைகள் களமிறங்கும் நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை மண்டல பொறுப்பாளர் கமீலா நாசர் களமிறங்குவதாக கூறப்படுகிறது. 

கமீலா நாசர்

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மனைவியான கமீலா நாசர். எம்.பில் பட்டதாரியான கமீலா நாசர், மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிட துறைமுகம் கட்சி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். இதே தொகுதியில் கமலஹாசன் போட்டியிட எழும்பூர் நிர்வாகிகள் சார்பாகவும் விருப்பமனு அளிக்கப்பட்டது. ஆனால், தனது சொந்த ஊரான பரமக்குடி இடம்பெற்றிருக்கும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட கமலஹாசன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
மத்திய சென்னை தொகுதிக்குள் வரும் துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளதாலும், வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணா நகர் பகுதிகளில் படித்தவர்கள், மத்திய தர வகுப்பினர் அதிகமாக உள்ளதாலும், கமீலா நாசரைக் களமிறக்கினால் வெற்றியை நெருங்கிட முடியும் என்று கமலஹாசன் கருதுகிறாராம். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு சான்ஸ் கிடைக்கலாம் எனத் தெரிகிறது. பிரபலமான அரசியல் முக்கியஸ்தர்கள் போட்டியிட முடிவெடுத்துள்ளதால், மத்திய சென்னை தொகுதி நட்சத்திர அந்தஸ்தை இப்போதே பெற்றுவிட்டது.


[X] Close

[X] Close