தூத்துக்குடியில் பதுக்கிவைக்கப்பட்ட 1,050 கிலோ பீடி இலைகள், 13 மூட்டை கடல் சங்குகள் பறிமுதல்! | 1,050 kg leaves and 13 packets sea sirens seized in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (09/03/2019)

கடைசி தொடர்பு:11:25 (09/03/2019)

தூத்துக்குடியில் பதுக்கிவைக்கப்பட்ட 1,050 கிலோ பீடி இலைகள், 13 மூட்டை கடல் சங்குகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக 35 பண்டல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ பீடி இலைகள் மற்றும் திருச்செந்தூரிலிருந்து வெளியூருக்குக் கடத்த முயன்ற 13 மூட்டை கடல் சங்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பீடி இலை

தூத்துக்குடி, தாளமுத்து நகர் கடற்கரைப் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் காலனியில், ஒரு லோடு ஆட்டோ மறைத்துவைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் கறுப்பு நிற பிளாஸ்டிக் பேப்பர்களால் சுற்றிவைக்கப்பட்ட பண்டல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், லோடு ஆட்டோவைக் கைப்பற்றி, பண்டல்களை சோதனையிட்டனர். அதில், பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து திருப்பூர் வழியாக இவை தூத்துக்குடிக்குக் கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 30 கிலோ எடை கொண்ட 35 பண்டல்களில், மொத்தம் 1,050 கிலோ பீடி இலைக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

பறிமுதல்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, இதே பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதற்குள், 1,050 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கடலோரப் பகுதியில் இருந்து படகுகள்மூலம் இதுபோன்ற போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தும் சம்பவம் அடிக்கடி நிகழ்கின்றன. கடலோரப் பாதுகாப்பு போலீஸார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதேபோல, திருச்செந்தூர் அருகிலுள்ள ஆலந்தலை கடற்கரையில் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட அரியவகை 13 மூட்டை கடல் சங்குகளைக் கடலோர பாதுகாப்பு போலீஸார் மற்றும் வனத் துறையினரின் சோதனையில் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி

 கடலோர பாதுகாப்பு போலீஸார் மற்றும் திருச்செந்தூர் வனத்துறையினர், ஆலந்தலை தெற்குக் கடற்கரைப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பிடிபட்ட 13 மூடைகள் கடல் சங்குகள்,  மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தால் தடை செய்யப்பட்ட அரியவகையான குதிரைமுள்ளி சங்குகள் என்பது தெரியவந்தது. லோடு ஆட்டோ டிரைவர் தப்பியோடியதால், இது தொடர்பாக அந்த ஆட்டோவில் வந்த கன்னியாகுமரி குண்டலைச் சேர்ந்த நாசர் என்பவரை விசாரணை நடத்திவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் வரை  இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close