இந்தியா முழுக்க 42,000 கி.மீ. தன்னந்தனியாக பயணிக்கும் சங்கீதா! ஏன்? | This Coimbatore woman has travelled 42000 kms all alone

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:13 (09/03/2019)

இந்தியா முழுக்க 42,000 கி.மீ. தன்னந்தனியாக பயணிக்கும் சங்கீதா! ஏன்?

பெண்கள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா  போன்றவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் தனியாகப் பயணம் மேற்கொண்டு வருகிறார் கோவையை சேர்ந்த புதுமைப்  பெண் சங்கீதா ஶ்ரீதர்.

இந்தியா முழுக்க 42,000 கி.மீ. தன்னந்தனியாக பயணிக்கும் சங்கீதா! ஏன்?

கோவையைச் சேர்ந்த 52 வயதான சங்கீதா ஶ்ரீதர் ஏமன் நாட்டில் இணையதள ஆலோசகராக 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் தன் தந்தையின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் இந்தியா முழுவதும் தனியாளாக காரில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய சங்கீதா, பயணம் ஆரம்பித்த 190-வது நாளில் நாட்டின் 21 வது எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கு வந்திருந்தார். இதுவரை 42 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனிமையில் பயணித்துள்ள சங்கீதா செய்தியாளர்களிடம் கூறுகையில்

 ''கோவையில் பிறந்து ஊட்டியில் வளர்ந்தவள் நான். மலையேறும் பயிற்சி, விமானம் ஓட்டும் பயிற்சி, பாரா கிளைடரில் பறக்கும் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுள்ளேன். ஏமனில் 22 வருடங்கள் அரசின் இணையதள ஆலோசகராக பணியாற்றி வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை எனக்கு அளித்த உத்வேகத்தின் காரணமாக அவருடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் நாடு முழுவதும் தன்னந்தனியாக இந்த கார் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இந்த பயணத்தின் நோக்கம் நாடு முழுவதும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பினை வலியுறுத்துவதுடன், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள கழிப்பறைகள் மற்றும் நகரங்களின் தூய்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள பொதுக் கழிப்பறைகளின் நிலை, அவை பராமரிக்கப்பட்டு வரும் முறை குறித்து அறிக்கை தயாரிக்க உள்ளேன்.

 

புதுமைப் பெண் சங்கீதா 


 நாள் தோறும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் 15 முதல் 16 மணிநேரம் கார் ஓட்டுகிறேன். நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். எல்லா இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு நல்ல நிலையில் உள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனது காரிலேயே தங்கி வருகிறேன். அதற்கு ஏற்றவாறு காரின் உட்புறத்தை வடிவமைத்துள்ளேன். இது நமது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நாட்டின் தென்கோடி தீவு பகுதியினை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சாலைப் பாலம் 2010-ம் ஆண்டு வரை இந்தியாவில் கடல் மீது அமைக்கப்பட்ட  நீண்ட பாலங்களில் முதலிடத்தில் இருந்து வந்தது. சுமார் 2.3 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த பாலத்தினை கடந்து வந்தது மறக்க முடியாத நினைவாகும். இங்குள்ள கோயிலுக்கு நிகராக மக்களிடம் புகழ் பெற்றிருக்கும் அறிவியலிலும், அரசாட்சியிலும் புகழுடன் விளங்கிய டாக்டர் அப்துல்கலாம் இல்லம், அவரது நினைவிடம் போன்றவை அமைந்துள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றாலும் இங்கு மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் பாராட்டும் வகையில் உள்ளது. இதில் மேலும் கவனம் செலுத்துவதன் மூலம் ராமேஸ்வரத்தை இன்னும் பெருமை பெறச் செய்ய முடியும். வரும் மே மாதத்தில் என்னுடைய பயணத்தை நான் பயணம் துவங்கிய மும்பை இந்தியா கேட் பகுதியிலேயே முடிக்க உள்ளேன். அபுதாபியில் உள்ள எனது கணவர் ஶ்ரீதரும், அமெரிக்காவில் பணியாற்றி வரும் எனது மகன் அஸ்வந்தும் எனது பயணத்திற்கு தேவையான உதவிகளை  அங்கிருந்தே வழங்கி வருகின்றனர்'' என்றார். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close