``மருத்துவக் கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடத்தப்படும்!” -அமைச்சர் விஜய பாஸ்கர் | Tamil Nadu Medical counselling change to online mode

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (09/03/2019)

கடைசி தொடர்பு:13:10 (09/03/2019)

``மருத்துவக் கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடத்தப்படும்!” -அமைச்சர் விஜய பாஸ்கர்

``இந்த ஆண்டு முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு, ஆன்லைன் வழியே நடத்தப்படும்" என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வு

கடந்த ஆண்டு, பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே கவுன்சலிங் நடத்தப்பட்டது. ``இந்த ஆண்டு, மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் வழியே கவுன்சலிங் நடத்தப்படும்.  இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, தற்போது பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. முதல்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடத்தப்படும். மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரியை ஆன்லைன் வழியே தேர்வுசெய்யலாம். ஆன்லைன் கலந்தாய்வுக்குப் பின்னர், இட ஒதுக்கீட்டை ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

கலந்தாய்வுக்காக, மாணவர்களும் பெற்றோர்களும் இனி சென்னைக்கு வர வேண்டிய அவசியமில்லை. இந்த ஆண்டு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்றும் அறிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர். 

நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தப்படுகிறது . ஏற்கெனவே, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களையும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் ஆன்லைன் கலந்தாய்வு வழியே நிரப்பப்படுகிறது. 


[X] Close

[X] Close